திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளில் நேர்காணல் நிகழ்வுகள் எப்படி நடந்துவருகின்றன என்பதை நாம் வெவ்வேறு செய்திகளில் வாசகர்களுக்கு வழங்கி வருகிறோம். திமுக, அதிமுக நேர்காணல்களில் முக்கியமாக முதன்மையாக இடம்பெறும் கேள்வி, ‘எத்தனை கோடி செலவு செய்வீங்க?’ என்பதுதான். எத்தனை ரூபாய் என்று கேட்பதில்லை, எத்தனை கோடி என்று தெளிவாகவே கேட்டுவிடுகிறார்கள்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்திவரும் கமல்ஹாசனும் தனது நேர்காணல்களை இரு தினங்களாக தொடர்ந்து நடத்துகிறார். நேற்று (மார்ச் 12) காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணிவரை நூற்றுக்கணக்கானோரை நேர்காணல் செய்திருக்கிறார் கமல்ஹாசன்.
நேர்காணலைப் பொறுத்தவரை குழுவில் கட்சிக் காரர்கள் மட்டுமில்லை. தலைவர் கமல்ஹாசன், துணைத் தலைவர் மகேந்திரன் ஆகியோரோடு பத்திரிகையாளர் மதன், கவிஞர்கள், இலக்கிய ஆளுமைகள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் என்று கட்சி சாராத ஒரு நிபுணர்கள் குழுவும் நேர்காணல் நடத்துகிறார்கள்.
நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களைப் பற்றி பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் ஏற்கனவே தகவல்கள் சேகரித்து வைத்துக் கொள்கிறார்கள். உள்ளே சென்றதும் முதல் கட்ட அறிமுகத்துக்குப் பிறகு சரமாரியான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவற்றில், நற்பணி இயக்கத்தில் எத்தனை ஆண்டுகளாக இருக்கிறீர்கள், இருந்து என்ன நற்பணி செய்திருக்கிறீர்கள் என்ற கேள்வியும் இடம்பெறுகிறது. இந்த கேள்விக்கான பதிலை பிரைவேட் ஏஜென்சி எடுத்துக் கொடுத்த பதிலோடு பொருத்திப் பார்த்து நேர்காணலின் திசையை நிர்ணயம் செய்கிறார்கள்.
அடுத்த முக்கியமான கேள்வி. அரசியலை முழு நேரத் தொழிலாக வைத்திருக்கிறீர்களா? அல்லது பகுதி நேரமாக செய்யப் போகிறீர்களா? முழு நேர அரசியல்வாதி என்றால் உங்கள் குடும்பத்துக்கான பொருளாதாரத்துக்கு வழிவகை செய்து வைத்திருக்கிறீர்களா? என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்?
இந்த சரமாரிக் கேள்விகளின் பின்னணி என்னவென்றால், அரசியல் மூலம் சம்பாதித்து குடும்பம் நடத்த வேண்டும் என்ற தேவை இல்லாதவர்களே வேட்பாளர்களாக வர வேண்டும் என்பதுதான்.
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் கேட்கப்படும் கேள்வி, ‘நீங்கள் நேர்காணலுக்கு வந்திருப்பது உங்கள் குடும்பத்தினருக்குத் தெரியுமா? என்ன சொல்கிறார்கள்” என்பதுதான்.
“உங்கள் தொகுதியின் அடிப்படைப் பிரச்னைகள் என்ன, அதற்காக ஏதாவது போராட்டம் நடத்தியிருக்கிறீர்களா?” என்ற கேள்விக்கான பதிலை குழுவினர் ஆர்வமாகக் கேட்டுக் கொள்கிறார்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேள்வி கேட்கிறார்கள். இதற்கான பதிலைப் பொறுத்து அவர்கள் மதிப்பெண்கள் இடுகிறார்கள். இந்த மதிப்பெண்களை வைத்தே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
திருச்சி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு வேட்பாளராக நேர்காணலுக்குச் சென்றுவந்த வழக்கறிஞர் சுவாமிநாதனிடம் பேசினோம்.
“மிகவும் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் நேர்காணல் இருக்கிறது. அரசியல் என்றாலே பிழைப்புக்கும் கோடிகளை சுருட்டுவதற்கும் என்றே ஆகிப் போன இந்நாட்களில் தேர்தல் என்ற செயல்பாட்டின் முதல் கட்டமான வேட்பாளர் தேர்வுக்கான மக்கள் நீதி மய்யத்தின் நெறிமுறைகள் தூய்மையான அரசியலுக்கு வித்திடும் வகையில் அமைந்துள்ளது” என்கிறார்.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒவ்வொரு வேட்பாளரும் 50 முதல் 70 லட்சம் வரையிலும், சட்டமன்றத்துக்கு 20- முதல் 30 லட்சம் வரையிலும் செலவழிக்கலாம். இதுபற்றியும் நேர்காணலில் கேள்விகள் கேட்கப்படுகிறது. கடைசி கேள்வியாகத்தான், ‘எவ்வளவு செலவு செய்ய முடியும்?’ என்ற கேள்வியை முன் வைக்கிறார்கள்.
நேர்காணல் முடிந்ததும் கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் இந்திய அரசியல் சாசனம் என்ற சட்டப் புத்தகம் தமிழ்ப் பதிப்பு வழங்கப்படுகிறது. நேர்காணலிலும் நேர்மறையான வித்தியாசத்தை நிலை நிறுத்தியிருக்கிறது மக்கள் நீதி மய்யம்.
**-ஆரா**�,”