மக்கள் நீதி மய்யத்துக்கு ‘டார்ச் லைட்’ சின்னம்!

Published On:

| By Balaji

நடிகர் கமல்ஹாசனின் கட்சியான மக்கள் நீதி மய்யத்துக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இந்தியா முழுவதும் 543 தொகுதிகளுக்கு விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் நியமித்தல் என அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றன. மறுபக்கம் தேர்தல் ஆணையமும் தேர்தல் விதிமுறைகள் வகுப்பது, தொகுதிகளில் ஆய்வு செய்வது, கட்சிகளுக்குச் சின்னம் ஒதுக்குவது என பல கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் நேற்று (மார்ச் 9) கட்சிகளுக்கான சின்னத்தை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. சுமார் 39 கட்சிகளுக்கான சின்னத்தை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ’பேட்டரி டார்ச்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் கிரிக்கெட் வீரர், பேட்டரி டார்ச், நெக்லஸ் ஆகிய மூன்று சின்னங்கள் மக்கள் நீதி மய்யம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ”மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “பேட்டரி டார்ச்” சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. பொருத்தமான சின்னம் தான். தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும்” என்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி, உறுப்பினர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை வாங்கி வருகிறது. விரைவில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் கட்சியைத் தொடர்ந்து, தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, மோதிரம் சின்னம் ஒதுக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share