மக்களவை: மாணிக்கம் தாகூர் தாக்கினாரா? தாக்கப்பட்டாரா?

Published On:

| By Balaji

டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்னும் ஆறு மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியை இளைஞர்கள் தடிகொண்டு தாக்குவார்கள் என்று தெரிவித்தார். இதற்கு நேற்று மக்களவையில் பதிலளித்த பிரதமர், ட்யூப் லைட் என்றும் ராகுல் காந்தியை விமர்சித்தார்.

இந்த நிலையில் மக்களவையில் இன்று (பிப்ரவரி 7) வயநாட்டில் மருத்துவக் கல்லூரி அமைப்பது குறித்து ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு, பதில் சொல்ல எழுந்த சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மோடியை விமர்சித்ததற்காக ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், ராகுல் காந்தி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் பேசிக்கொண்டே சென்றார். உடனே, குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா அமைச்சரை நோக்கி, கேள்விக்கு மட்டும் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், அமைச்சர் பேச்சை தொடர்ந்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கமிட்டபடியே அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். பாஜக எம்.பி.க்களும் எதிர்குரல்கள் எழுப்பினர். தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர், இரண்டாவது வரிசையில் பேசிக்கொண்டிருந்த மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் இருக்கையை நோக்கி வேகமாக முன்னேறினார். சில பாஜக எம்.பி.க்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து, பாஜக-காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால், அவை 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் அவை கூடிய நிலையில், அமளி தொடர்ந்ததால் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கும் அமளி நீடித்ததால் அவையை நடத்திய ஆ.ராசா நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

இதுதொடர்பாக பேசிய ஹர்ஷவர்தன், “காங்கிரஸ் எம்.பி.க்கள் என்னுடைய இருக்கைக்கு முன்னேறி, என்னைத் தாக்கவும், என்னிடமிருந்த ஆவணங்களை பறிக்கவும் முயற்சி செய்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசும்போது, “மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தனை காங்கிரஸ் எம்.பி.க்கள் தாக்க முயன்றது கண்டிக்கத்தக்கது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய அமைச்சர் ஏதாவது தவறாகப் பேசி இருந்தால், அதை சபாநாயகர் பார்த்து நடவடிக்கை எடுப்பார். ஆனால், அமைச்சரை தாக்க முற்படுவது கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த மாணிக்கம் தாகூர், “விமர்சனத்தை நிறுத்திவிட்டு, கேள்விக்கு பதிலளிக்குமாறு சொல்வதற்குத்தான் அந்த இடத்திற்கு சென்றேன். ஆனால், பாஜக எம்.பி.க்கள் என்னை கும்பலாகச் சேர்ந்து தாக்கினர். குறிப்பாக பாஜக எம்.பி பிரிஜி பூஷன் சிங், என்னை தள்ளிவிட்டதோடு, கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டினார்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதமும் எழுதியுள்ளார். அதில், “சிசிடிவி காட்சிகளை சரிபார்த்து என்னை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “வயநாட்டில் மருத்துவக் கல்லூரி இல்லாதது பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆகவே, அதுதொடர்பாக கேள்வி எழுப்பினேன். நான் பேசினாலே பாஜகவினருக்குப் பிடிக்காது. நாடாளுமன்றத்தில் பேச எங்களுக்கு அனுமதியில்லை. நீங்கள் காட்சிகளை பாருங்கள், மாணிக்கம் தாகூர் யாரையும் தாக்கவில்லை. மாறாக அவர்தான் தாக்கப்பட்டார்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

**த.எழிலரசன்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share