|மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!

Published On:

| By Balaji

மக்களவைத் தேர்தலுக்கான 7ஆம் கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியோடு முடிவடைந்துள்ளது.

17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான 7 கட்ட தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி, இன்று (மே 19) முடிவடைந்துள்ளது. பஞ்சாப் (13), உத்தரப் பிரதேசம் (13), மேற்கு வங்கம் (9), பிகார் (8), மத்தியப் பிரதேசம் (8), இமாசலப் பிரதேசம் (4), ஜார்கண்ட் (3), சண்டிகரில் (1) உள்ள 59 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு நடந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 53.03 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

**மாநில வாரியான வாக்குப்பதிவு (மாலை 5 மணி நிலவரப்படி- %)**

பிகார்- 46.75

சண்டிகர்- 51.18

இமாசலப் பிரதேசம்- 57.43

மத்தியப் பிரதேசம்- 59.75

பஞ்சாப்- 50.49

உத்தரப் பிரதேசம்- 47.21

மேற்கு வங்கம்- 64.87

ஜார்கண்ட்- 66.64

**முக்கிய நிகழ்வுகள்**

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள பவானிபூரில் தனது வாக்கினை செலுத்தினார். வாக்களித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “பாஜகவினரும், சிஆர்பிஎஃப் வீரர்களும் தேர்தலை அமைதியாக நடத்த விடாமல் இடையூறு செய்கின்றனர். இதற்கு முன்பு இப்படி மேற்கு வங்கத்தில் நடந்ததே இல்லை” என்று குற்றம்சாட்டினார். மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சி தேர்தலை அமைதியாக நடத்த விடாமல் சீர்குலைப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி வாரணாசியிலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கொல்கத்தாவிலும் தனது வாக்கை செலுத்தினர். சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் நடந்த 1951ஆம் ஆண்டு முதல் எல்லா தேர்தலிலும் வாக்களித்து வரும் 102 வயது முதியவர் ஷியாம் சரண் நேகி இமாசலப் பிரதேசத்தின் கின்னார் பகுதியில் இம்முறையும் மிகுந்த உற்சாகத்தோடு வந்து தனது வாக்கை செலுத்தினார். அதேபோல, பாட்னாவில் தலை ஒட்டிப்பிறந்த சகோதரிகள் சபா மற்றும் ஃபராஹ் இருவரும் முதன்முதலாக தனித்தனியாக வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டு வாக்கு செலுத்தினர்.

உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு இன்று தேர்தல் நடந்தது. இமாசலப் பிரதேசத்தின் மாண்டி மக்களவைத் தொகுதியில் வருகிற தாஷிகேங் பகுதியானது கடல் மட்டத்திலிருந்து 15,256 அடி உயரத்தில் உள்ளது. இங்கு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு, வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. உலகிலேயே மிக உயரமான பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி என்ற பெருமையை இப்பகுதி பெற்றுள்ளது.

**அசம்பாவிதங்கள்**

இதற்கு முன்பு நடந்த 6 கட்ட தேர்தலைப் போல இன்றும் மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் பாஜகவினருக்கும், திருணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே [மோதல் ஏற்பட்டது](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/40). வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்புப் படையினர் வாக்காளர்களை மிரட்டுவதாகக் கூறி திருணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பியும், பராசத் தொகுதி வேட்பாளருமான ககோலி கோஷ், நியூ டவுன் காவல் நிலையத்துக்கு வெளியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டாவில் உள்ள தல்வாண்டி சபோ வாக்குச்சாவடி எண் 122க்கு வெளியே இரண்டு குழுக்களுக்குள் உருவான சண்டை மோதலாக மாறியது. சண்டையின்போது துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சண்டையில் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சண்டை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். பாட்னாவில் உள்ள சர்குனா கிராமத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே மூண்ட சண்டையால் வாக்குச்சாவடி எண் 101 மற்றும் 102ல் வாக்குப்பதிவு சில மணி நேரங்கள் பாதிக்கப்பட்டது.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)

**

.

**

[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)

**

.

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)

**

.

**

[விமர்சனம்: மான்ஸ்டர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/14)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share