அண்மை ஆண்டுகளில் வெளிவராத அசல் அரசியல் சினிமா ஜனவரி 11ஆம் தேதி வர இருக்கிறது. ‘தி ஆக்சிடென்ட்டல் ப்ரைம் மினிஸ்டர்’ என்ற திரைப்படம் தான் அது. மூன்று மாநிலத் தேர்தல்களில் வெற்றிபெற்று அடுத்த மக்களவைத் தேர்தலை நம்பிக்கையோடு எதிர்கொண்டு நிற்கிற காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது இந்தத் திரைப்படம்.
2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கைப்பாவையாகவே வைக்கப்பட்டிருந்தார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. 2014 ஆட்சியின் முடிவில் மன்மோகன் சிங் (பிரதமர்) அலுவலகத்திலேயே பத்திரிகைத் தொடர்பு ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரூ என்பவர், ‘த ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இது காங்கிரஸ் கட்சிக்குள் கடுமையான சலசலப்பை ஏற்படுத்தியது.
அந்தப் புத்தகம் திரைப்பட வடிவம் பெற்று, ஜனவரி 11ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது அதன் டிரைலர் நேற்று (டிசம்பர் 27) வெளியிடப்பட்டு சமூக தளங்களில் வைரலாகிவருகிறது.
மன்மோகன் சிங்காக பிரபல நடிகர் அனுபம் கெர் நடித்துள்ள, இந்தத் திரைப்படம் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இன்று காங்கிரஸ் கட்சியின் 134ஆவது நிறுவன தின நிகழ்ச்சிக்காக டெல்லி காங்கிரஸ் அலுவலகம் வந்த மன்மோகன் சிங்கிடம், இத்திரைப்படத்தின் டிரைலர் பற்றிச் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலேதும் சொல்லாமல் கடந்து சென்றுவிட்டார் மன்மோகன் சிங்.
இந்நிலையில் இத்திரைப் படத்துக்கு விரிவான விளம்பரத்தைத் தேடித் தரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது பாஜக. அக்கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில், ‘ஒரு குடும்பத்தின் பிடியில் இந்தியா பத்து ஆண்டுகள் இருந்ததைச் சொல்லும் படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகிறது” என்று பதிவிட்டிருக்கிறது.
திரைப்படத்தில் மன்மோகன் சிங் வேடத்தில் நடித்திருக்கும் அனுபம் கெரின் மனைவி கிரோன் கெர் பாஜகவில் இருக்கிறார். இந்த விவகாரமும் சூடுபிடித்திருக்கிறது.�,