`மகாராஷ்டிரா பொருளாதாரம் 9% வளர்ச்சி!

Published On:

| By Balaji

நடப்பு நிதியாண்டின் முடிவில் மகாராஷ்டிர மாநிலத்தின் பொருளாதாரம் 9.4 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று, அம்மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் 2016-17 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை அம்மாநில நிதியமைச்சர் சுதிர் முங்கண்டிவார் சட்டமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில், இரண்டு ஆண்டு தொடர்ச்சியான வறட்சியைத் தொடர்ந்து 2016-17 நிதியாண்டில் சிறப்பான மழைப் பொழிவு (94.9%) காணப்பட்டது. மாநிலத்தில் மொத்தமுள்ள 355 தாலுகாக்களில் 58 தாலுகாக்களில் குறைவான மழையும், 216 தாலுகாக்களில் மிதமான மழையும், 81 தாலுகாக்களில் மிதமிஞ்சிய மழையும் இருந்தது.

2016 காரிஃப் பருவத்தில், 152.12 லட்சம் ஹெக்டேர்கள் அளவுக்கு பயிர்கள் விதைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நிதியாண்டில், தானிய உற்பத்தி 80 சதவிகிதமும் பருப்பு வகைகள் 187 சதவிகிதமும் எண்ணெய் வித்துக்கள் 142 சதவிகிதமும் மற்றும் பருத்தி 83 சதவிகிதமும் கூடுதலான அளவில் உற்பத்தி செய்யப்படும். அதேநேரம் சர்க்கரை உற்பத்தியில் முந்தைய ஆண்டைவிட 28 சதவிகிதம் சரிவு காணப்படும்.

2016ஆம் ஆண்டின் ராபி பருவத்தில் 51.31 லட்சம் ஹெக்டேர்கள் அளவுக்கு பயிர்கள் விதைக்கப்பட்டுள்ளன. அதேபோல தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பருத்தி உற்பத்தி முறையே, 62%, 90% மற்றும் 36% கூடுதலான அளவில் உற்பத்தி செய்யப்படும். வேளாண்மை சார்ந்த துறைகளில் 12.5 சதவிகித வளர்ச்சி காணப்படும்.

தொழில் துறையில் 6.7 சதவிகித வளர்ச்சியும் மற்றும் சேவைகள் துறையில் 10.8 சதவிகித வளர்ச்சியும் இருக்கும். நடப்பு நிதியாண்டுக்கான மொத்த வருவாய் ரூ.2,20,810 கோடியாக இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்ற 2015-16 நிதியாண்டில் அது 1,98,321 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான முதல் ஒன்பது மாதங்களில் கிடைத்த வருவாய் ரூ.1,40,864 கோடி. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயைவிட 11.4 சதவிகிதம் அதிகமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share