மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. அதற்கான இடங்கள் பாஜக – சிவசேனா கூட்டணியிடம் இருந்தபோதும், இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி, ஆட்சியில் சமபலம் என்ற நிபந்தனையை பாஜகவுக்கு, சிவசேனா விதித்ததால் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க சிவசேனா எடுத்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை. இதற்கிடையே தங்களது எம்.எல்.ஏ.க்களை பாஜக இழுக்க முயற்சி செய்வதாகக் குற்றம்சாட்டிய சிவசேனா, கட்சி தாவாமல் பாதுகாக்க அவர்களை பாந்த்ராவில் உள்ள ஹோட்டலில் தங்கவைத்தது.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் புதிய அரசு அமைவதில் பாஜக – சிவசேனா இடையே முடிவு எட்டப்படாத நிலையில், பதவிக் காலம் முடிந்ததால் முதல்வர் பதவியிலிருந்து கடந்த 8ஆம் தேதி தேவேந்திர பட்னாவிஸ் விலகினார்.
இந்த நிலையில் தனிப்பெரும் கட்சி என்ற முறையில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான கடிதத்தையும் பட்னாவிஸ் பெற்றுக்கொண்டுள்ளார். நாளைக்குள் (நவம்பர் 11) சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் கெடு விதித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த மகாராஷ்டிர பாஜக தலைவர் சுதிர் முன்கன்டிவர், “ஆளுநரிடமிருந்து ஆட்சியமைக்க அழைக்கப்பெறுவது அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாகும். நாளை (இன்று) நடைபெறும் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும். சிவசேனாவுக்கு பாஜகவைத் தவிர வேறு வழியில்லை. சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆட்சியமைக்க இன்னும் 41 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படும் நிலையில் பாஜக ஆட்சியமைக்குமா? அப்படி ஆட்சியமைத்தால் பெரும்பான்மையை எப்படி நிரூபிக்கும் உள்ளிட்ட கேள்விகளுக்கு இன்றோ அல்லது நாளையோ விடை கிடைத்துவிடும்.�,