உத்தரப் பிரதேச மாநிலத்தின் ராபரேலி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங்கை அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி நியமனம் செய்துள்ளார் .
இது தொடர்பான அறிவிப்பை இன்று (ஆகஸ்ட் 23) காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ளார்.
தற்போது இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அதிதி இது குறித்து தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் “புதிய பதவியை எனக்கு வழங்கியதற்காகக் கட்சியின் தலைமைக்கு எனது நன்றியைத் தெரித்து கொள்கிறேன். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது நான் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தேன். முக்கிய பதவிக்கு என்னை தேர்ந்தெடுத்ததற்காக அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ்னுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்திக்கு நெருக்கமான அதிதி , காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகிலேஷ் சிங்கின் மகள் ஆவார். இவர் அமெரிக்காவில் உள்ள டூக் பல்கலைக்கழகத்தில் முதுகலை மேலாண்மை பட்டப்படிப்பை முடித்தவர். ராபரேலி தொகுதியிலிருந்து 5 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அகிலேஷ் சிங்குக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், அதே தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 2017ஆம் ஆண்டு போட்டியிட்ட அதிதி சுமார் 90,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.�,