ப்ளூவேல் குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் என தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் தனியார் சேனல்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று(அக்டோபர் 27) உத்தரவிட்டுள்ளது.
ப்ளூவேல் என்னும் உயிர்க்கொல்லி விளையாட்டால் இந்தியாவில் பலர் உயிரிழந்து இருக்கின்றனர். பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இந்த விளையாட்டால், இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட மரணங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.எஸ்.பொன்னையா என்பவர் ப்ளூவேல் விளையாட்டை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த விவகாரத்தை ஆராய ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து மூன்று வாரங்களுக்குள் அறிக்கையை அந்த குழு தாக்கல் செய்யவுள்ளது என மத்திய அரசு பதிலளித்துள்ளது.
ப்ளூவேல் விளையாட்டின் தீமைகளை மக்களுக்குப் புரிய வைக்கும் வகையில் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும் என தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் தனியார் சேனல்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை ப்ரைம்டைம் எனப்படும் நேரத்தில் பத்து நிமிடங்கள் ஒளிபரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.�,