தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது உண்மைதான் என்றும், அதற்காக முழுநேர போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உறவினரான தீபா.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பைத் தொடங்கினார் அவரது உறவினரான ஜெ.தீபா. இடையில், அதிமுக ஜெ.தீபா அணி என்று இதன் பெயர் மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, ஜெ.தீபா பேரவை என்ற பெயரில் இது இயங்கிவருகிறது.
திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றிய ஜெ.தீபா பேரவை நிர்வாகிகள் சார்பில், நேற்று (பிப்ரவரி 22) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பேரவையின் பொதுச்செயலாளர் தீபா கலந்துகொண்டார். முசிறியில் தனது பேரவையின் கொடியை ஏற்றினார். மேலும், அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்;
அதன் பின் தொண்டர்களிடையே பேசிய தீபா, “தமிழக மக்களுக்குப் புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும் எவ்விதமான நல்லாட்சியை வழங்கினார்களோ, அதுபோன்ற மக்களாட்சியை வழங்கிட வேண்டும். தீயசக்திகளை முடக்கிவிட்டு நாம் ஆட்சிக்கு வருவோம்” என்று தெரிவித்தார்.
அதன் பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தீபா, நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்யத் தேவையில்லை என்றார். “அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உள்ளது. மக்களைச் சந்திப்பது, அவர்களது தேவைகள் மற்றும் பிரச்சனைகளை முன்வைப்பது தான் அரசியலின் முக்கிய அம்சம். இதனை மக்களிடத்தில் அவர்கள் சரியாகக் கொண்டுபோய் சேர்ப்பார்களா என்பதை, நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அரசியலில் புதிதாக வருபவர்களுக்குச் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டால், நல்ல மாற்றம் ஏற்படும்” என்று தெரிவித்தார். அரசியலுக்கு வந்த பின்பு, நடிகர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய தீபா, “தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பங்கு எதுவும் இல்லை. காவல் துறையினர் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார்கள். எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது உண்மைதான். அதற்காக, எனக்கு முழுநேர போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை” என்று கூறினார்.
காவிரி நீர் விவகாரத்தில், மக்களின் பிரச்சினைகளை நீதிமன்றத்தில் முன்வைத்து உரிய நீரைப் பெற்றுத்தரத் தமிழக அரசு தவறிவிட்டது என்றும், பிற மாநிலங்கள் தங்களது வாதத்தைச் சரியாக முன்வைத்தன என்றும் குறிப்பிட்டார். மேலும், அதிமுகவில் இருந்து பல அமைப்புகள் பிரிந்துள்ளதால், ஒருங்கிணைந்த அதிமுகவின் பலம் குறைந்துவிட்டதாகக் கூறினார். புதிதாகக் கட்சி தொடங்கியவர்களுக்கும், மற்ற கட்சிகளுக்கும் மக்கள் வாக்களிக்கும்போது, இதனால் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்தார் தீபா.
முன்னதாக, முசிறியில் நடந்த கூட்டத்தில் தீபா கலந்துகொண்டபோது ’வருங்கால முதலமைச்சர் வாழ்க’, ’இளைய புரட்சித்தலைவி வாழ்க’ என்று தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.
�,