�ஆண்கள் மீது பொய்யான பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கும் பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் நேற்று (ஆகஸ்ட் 22) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில் கூறியபோது, “பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் இந்தியாவில் சாதாரணமாக நடைபெறுகின்றன. பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்யும் பெரும்பாலான குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அதேநேரம், அரிதாக சில இடங்களில், ஆண்கள் மீது பெண்களால் போலியான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
பெண்ணொருவரால், பொய்யான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு செலுத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்த சகோதரர்கள் இருவரை ஆகஸ்ட் 21ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது. ஆனால், அவர்கள் ஏழு ஆண்டுகள் செய்யாத குற்றத்துக்காக சிறைத் தண்டனை பெற்றுள்ளனர். இவர்கள் சந்தித்த மனவேதனைக்கும், மன உளைச்சலுக்கும் யார் பதில் சொல்வது?
எனவே, ஆண்கள் மீது பொய்யான பாலியல் வழக்குகளைத் தொடுக்கும் பெண்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கும் சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்றார்.�,