போலி செய்திகள், குழந்தை ஆபாசப் படங்களை கட்டுப்படுத்த சட்டத்திருத்தம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
போலி செய்திகள் மற்றும் குழந்தை ஆபாச படங்களை வெளியிடும் இணையதளங்கள் மற்றும் செயலிகள் மீதான தண்டனையை உயர்த்தும் நோக்கில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை திருத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விதிமுறைகள் மீறப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட செயலி அல்லது இணையதளத்தை முற்றிலுமாக நீக்குவதற்கு வழிவகை செய்யும் விதத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு பிரபல சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் இணைய பெருநிறுவனங்களின் பிரதிநிதிகளை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சட்டவிரோதமான தகவல்கள் எங்கு உருவாகிறது, அவற்றை எவ்வாறு நீக்குவது என ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தின்போது, விதிமீறல்களுக்கான தண்டனையை உயர்த்துவதற்கு சட்டத்திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக சமூக ஊடக மற்றும் இணைய நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. இதுபற்றி அரசு உயரதிகாரி ஒருவர் பேசுகையில், “நிறுவனங்கள் விதிகளை மீறும்போதும், ஒத்துழைக்க மறுக்கும்போதும் அவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க எங்களுக்கு பொறுப்பும், அதிகாரமும் வேண்டும்” என்று கூறினார். இந்த சட்டத்திருத்தங்களால் வாட்சப், ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர், டெலகிராம் போன்ற பிரபல சமூக ஊடக நிறுவனங்களின் சேவைகளில் தாக்கம் ஏற்படும். இவ்விவகாரத்தில் மேற்கூறிய நிறுவனங்கள் ஏற்கெனவே அரசுடன் கருத்து வேறுபாட்டில் உள்ளன. இதன் வாயிலாக, தேர்தல் மற்றும் அரசியல் தொடர்பான செய்திகளையும், போலி செய்திகளையும் கட்டுப்படுத்த அரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறது.�,