நீதிமன்றத்திற்கு போலி அறிக்கை அளித்த சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்துக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
2018ஆம் ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கைவிரல் ரேகை பிரிவில் உதவி ஆய்வாளர் பணிக்கு நடத்திய தேர்வில், ஒரு கேள்விக்குச் சரியான விடை எழுதிய தனக்கு மதிப்பெண் வழங்கவில்லை என்று புகார் எழுப்பினார் இரண்டாம் நிலை காவலர் அருணாச்சலம். இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சென்னை ஐஐடி பேராசிரியர் மூர்த்தி என்பவர் அளித்த பரிந்துரையின்படி மனுதாரர் எழுதிய விடை தவறு எனக் கூறி அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஐஐடியில் மூர்த்தி என்ற பெயரில் எவரும் இல்லை எனவும், இந்த அறிக்கை போலியானது எனவும் கூறி, அருணாச்சலம் தரப்பில் முறையிடப்பட்டது. நேற்று (ஏப்ரல் 1) நடந்த விசாரணையின்போது, இது குறித்து அதிர்ச்சி தெரிவித்தார் நீதிபதி. விரிவான பதில் மனுதாக்கல் செய்ய வேண்டுமென்று சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஐஜி மற்றும் உறுப்பினர் செயலருக்கு உத்தரவிட்டார்.
இன்று (ஏப்ரல் 2), இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதைப் படித்த நீதிபதி, நேற்று எழுப்பிய கேள்விகளுக்கான முழுமையான விளக்கத்தை அரசு தரப்பு தரவில்லை என்று அதிருப்தி தெரிவித்தார். “ஜி.வி.குமாருக்கு எவ்வளவு சன்மானம் (கட்டணம்) வழங்கப்பட்டது என்பது பற்றியோ, மூர்த்தியிடம் அறிக்கை பெற குமாருக்கு அறிவுறுத்தியது யார்? என்பது பற்றியோ விவரங்கள் இல்லை” என்று கூறினார்.
அப்போது, கேந்திர வித்யாலயா பள்ளியில் பணியாற்றி மூர்த்தி ஓய்வு பெற்றதாகவும், கணித ஆசிரியர் என்ற அடிப்படையில் அவரிடம் கேள்விக்கு விடை கேட்டு வாட்ஸ்அப் மூலம் குமார் தொடர்பு கொண்டதாகவும், ஒருநாள் சீருடைப் பணியாளர் அலுவலகத்துக்கு வரச் சொல்லி சில வெற்றுக் காகிதங்களில் கையெழுத்திடச் சொன்னதாகவும், தன்னை ஒரு ஐஐடி பேராசிரியராக ஜோடித்து இந்த வழக்கில் கொண்டுவந்ததாகவும், மூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். தற்போது தன்னை போலீசார் கைது செய்ய முயல்கின்றனர் என்றும், தன் மீதான எப்ஐஆர் ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
அப்போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் குறுக்கிட்டார். இது தொடர்பாகப் பதிவான வழக்கில் ஐஜியை ஏமாற்றிய விவகாரத்தில் ஆலோசகர் குமார் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். வழக்கு குறித்து அரசுத் தலைமை வழக்கறிஞர் வாதிட இருப்பதால், வழக்கை நாளை ஒத்திவைக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஆலோசகர் ஒருவர் ஐஜியை ஏமாற்றியுள்ளார் என்பது வெட்கக்கேடானது என்று தெரிவித்தார். போலி அறிக்கையைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளதாகக் கூறி, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் மீது தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டார் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்.
இந்த வழக்கில் அரசு தாக்கல் செய்த ஆவணங்கள் பற்றி சந்தேகம் ஏற்படுவதாகத் தெரிவித்தார் நீதிபதி. “ஆலோசகர் குமார் மோசடி செய்த நிலையில், விடையைச் சரி பார்த்தார் என்பதற்காக மட்டும் மூர்த்தியைத் துன்புறுத்தும் நோக்கில் காவல் துறை செயல்படுகிறது. இதனை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்தார் நீதிபதி. இதையடுத்து, இந்த விசாரணை வரும் 5ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
�,