போபர்ஸ் பீரங்கி பேர வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு சிபிஐ தொடுத்த மேல் முறையீட்டை உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 2) நிராகரித்துவிட்டது. காலங்கடந்து இந்த மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது 1980 களில் இந்தியாவுக்கும் ஸ்வீடன் நாட்டின் போபர்ஸ் ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே 1,437 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. போபர்ஸ் ரக பீரங்கிகளை இந்திய ராணுவத்துக்குக் கொள்முதல் செய்வதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தப்படியான ஆயுதங்கள் 1986 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி இந்திய ராணுவத்துக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி சுவீடன் நாட்டு வானொலி, ‘இந்த ஆயுத ஒப்பந்தத்துக்காக இந்தியாவைச் சேர்ந்த உச்ச அரசியல்வாதிகளுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் 64 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று தகவல் வெளியிட்டது. அது இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது.
1990 ஆண்டு ஜனவரி மாதம் இதில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. 1999 ஆம் ஆண்டு முதல் குற்றப் பத்திரிகையும், 2000 ஆம் ஆண்டு மேலும் ஒரு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. ராஜீவ் குடும்பத்துக்கு நெருக்கமான இத்தாலிய தொழிலதிபர் குட்ரோச்சி, இந்துஜா சகோதரர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டதால் காங்கிரஸுக்கு பெரும் அரசியல் வீழ்ச்சி ஏற்பட்டது.
டெல்லி உயர்நீதிமன்றம் 2005 ஆம் ஆண்டு இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போபர்ஸ் நிறுவனம், பிரிட்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர்களான இந்துஜா சகோதரர்களை விடுவித்தது. அப்போது காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்டிருந்ததால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ அப்பீல் செய்யவில்லை. வெளிநாடு சென்ற கொட்ரோச்சி பின்பு இத்தாலியிலேயே இறந்துபோய்விட்டார்.
இந்நிலையில் போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியது தொடர்பாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கைகளை நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவின் துணைக் குழு அண்மையில் ஆய்வு செய்தது. அப்போது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க விரும்புவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டு சோனியா காந்தியை எதிர்த்து ரேபரேலியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அஜர் அகர்வால், 2018 பிப்ரவரி மாதம் போபர்ஸ் வழக்கை மறு விசாரணை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, “13 வருடங்களுக்கு பின் தாமதமாக மனு செய்யப்பட்டிருப்பதால் ஏற்க முடியாது” என்று தள்ளுபடி செய்துவிட்டது.
�,