போட்டுத் தாக்கும் பாஜக – போராடும் கெஜ்ரிவால்! -பத்திரிகையாளர் ப்ரியன்!

public

கெஜ்ரிவால் பற்றி யோசிக்கும்போது, கபடி விளையாட்டில் நாம் காணும் ஒரு காட்சியும் கண்முன்னே வருகிறது. ‘கபடி கபடி’ என்று சொல்லியபடி, எதிரணியின் ஏரியாவுக்குள் நுழையும் வீரரை எதிரணியினர் ஒன்றுகூடி அழுத்திப் பிடித்துவிடுவார்கள். பிடிபட்ட வீரர் மூச்சை விட்டுவிடாமல் ‘கபடி கபடி’ என்று சொல்லிக்கொண்டே எதிரணியினர் பிடியிலிருந்து விடுபட, கையை நீட்டி நடுக்கோட்டைத் தொட முயற்சி செய்வார். சிலசமயங்களில் அந்த வீரர் மூச்சைவிட்டு அவுட்டாகி விடுவதும், சில சமயங்களில் நடுக்கோட்டைத் தொடுவதும் கபடிப் போட்டிகளில் சகஜமான ஒன்று.

இப்படி, கபடி விளையாட்டில் எதிரணியிடம் மாட்டி அகப்பட்டு போராடும்நிலையில்தான் கெஜ்ரிவாலின் தற்போதைய நிலை இருக்கிறது என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட விமர்சனமல்ல. டெல்லி சட்டசபையில் மொத்தமுள்ள எழுபது சட்டமன்றத் தொகுதிகளில் அறுபத்தேழு தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வென்றது. மூன்றே தொகுதிகளில் பாஜக வென்றது. மோடியின் செல்வாக்கு டெல்லி செங்கோட்டையில் பறக்கும் தேசியக்கொடியைவிட உயர்வாக பறந்துகொண்டிருந்தநிலையில், பாஜக மூன்று இடங்களில் மட்டும் வென்று படுதோல்வி அடைந்ததை பாஜக-வினரால் சிறிதும் ஜீரணிக்க முடியவில்லை. எனவே, கெஜ்ரிவால் பதவியேற்ற அடுத்த நாளிலிருந்தே அவரது அரசுக்கு ஸ்பீட் பிரேக்கர் போடும் வேலை தொடங்கிவிட்டது.

டெல்லி அரசு என்பது முழு அதிகாரம் பெற்ற மாநில அரசு அல்ல. அது, மத்திய அரசின் நேரடி ஆளுமைக்கு உட்பட்ட பிரதேசம். இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிகள், அமைச்சர்கள் இருந்தாலும் விதிகளின்படி சர்வ அதிகாரங்களும் துணைநிலை ஆளுநர் கையில்தான் இருக்கிறது. இந்த துணைநிலை ஆளுநருக்கு வழிகாட்டி, நிர்வாகத்தை நடத்தும் உரிய அதிகாரமும் மத்திய அரசின் உள்துறையிடமே இருக்கிறது.

டெல்லி அரசின்வசம் காவல்துறை கிடையாது. முதல்வருக்கும், காவல்துறைக்கும் தொடர்பில்லை. காவல்துறை ஆணையர், மத்திய உள்துறை மற்றும் துணைநிலை ஆளுநர் வழிகாட்டுதலின்கீழ்தான் இயங்குவார். டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் நிலங்களை நிர்வகிக்கும் அதிகாரமும் கிடையாது. அந்த அதிகாரம் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழுள்ள டெல்லி வளர்ச்சிக் குழுமத்தின் கையில் இருக்கிறது. ஊழல் புகார்களை விசாரிக்கும் காவல் பிரிவும் துணைநிலை ஆளுநரின்கீழ் செயல்படுகிறது.

இலங்கையில் வடக்கு மாகாணத்துக்கு எப்படி முக்கியமான அதிகாரங்கள் வழங்கப்படவில்லையோ, கிட்டதட்ட அதேபோன்றுதான் இயங்குகிறது டெல்லி அரசு. டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டுமென்று அவ்வப்போது கோஷங்கள் எழுந்தாலும் மத்திய அரசு கண்டுகொள்வதில்லை. டெல்லி, நாட்டின் தலைநகரமாக இருப்பதால் முழு அதிகாரம்கொண்ட மாநில அரசு செயல்படுமானால் பாதுகாப்பு உட்பட பல பிரச்னைகளில் மோதல்வரும் வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு கருதுகிறது. எனவே, இன்றிருக்கும் பாஜக-வும் சரி, நாளை காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கொடுக்க மாட்டார்கள்.

இப்படி எல்லா அதிகாரங்களும், முக்கியமாக காவல்துறை உட்பட துணைநிலை ஆளுநரிடமும், அவருக்கு வழிகாட்டும் மத்திய அரசிடமும் குவிந்துகிடப்பதால் தேர்தலின்போது வாக்களித்தபடி செயல்பட முடியாதநிலையில் இருக்கிறார் கெஜ்ரிவால். அரசின் அன்றாட நிர்வாகச் சக்கரம் சுழல்வதில்கூட ஏகப்பட்ட இடையூறுகள்.

டெல்லி அரசும், மத்திய அரசும் ஒரே கட்சியைச் சார்ந்தவர்களால் நிர்வகிக்கப்பட்டால் பெரியளவில் பிரச்னைகள் இருக்காது. ஆனால், அரசியல்ரீதியாக ஆம் ஆத்மியும், பாஜக-வும் பூனையும் எலியுமாக இருப்பதால் சர்ச்சைகள் தொடர்கதையாகின்றன. ஊழலுக்கு எதிராக இயக்கம் கண்டு ஆட்சிக்கு வந்தவர் கெஜ்ரிவால். அவர் ஆயுதத்தைப் பிடுங்கி அவரையே தாக்கும் கதையாக, எந்த ஒரு நிர்வாக முடிவிலும் ஊழல் ஊழல் என்று கூப்பாடு போடுகிறது பாஜக. ஊழல் ஒழிப்பு காவல்துறை, துணைநிலை ஆளுநர் சொல்படி இயங்குவதால் பாஜக-வின் புகார்கள் உடனடியாகப் பதியப்பட்டு முதல் தகவல் அறிக்கை, விசாரணை என்று சர்ச்சைகள் தொடங்குகின்றன. பாஜக பாசத்தினாலோ அல்லது அழுத்தத்தினாலோ மீடியாக்களும் கெஜ்ரிவால் அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை பரபரப்பாக வெளியிடுகின்றன.

இப்படி, பாஜக கொடுக்கும் கடுமையான நெருக்கடிகளின் காரணமாக இரண்டு அமைச்சர்களை காவு கொடுக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார் கெஜ்ரிவால். பல ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களின் மீது காவல்துறை வழக்குகள் பதிவுசெய்து விசாரணை, கைது என்று அலைக்கழிக்கிறது. எம்எல்ஏ-க்களை பயமுறுத்தி, அவர்களை கட்சித் தலைமைக்கு எதிராகச் செயல்படவைக்கும் முயற்சி தொடர்ந்து நடந்துவருகிறது. எப்படிப்பட்ட நெருக்கடி கொடுக்கப்பட்டாலும் ராஜினாமா செய்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் கெஜ்ரிவால். தன்னை சங்கடப்படுத்தும் அஜண்டாவை மோடியே செயல்படுத்துவதாகக் குற்றம் சாட்டுகிறார். ஆனால் மோடி, அவரது எந்தக் குற்றச்சாட்டுக்கும் நேரடியாகப் பதில் சொல்வதில்லை.

கெஜ்ரிவால் அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய லோக் ஆயுஃதா மசோதாவுக்கு இன்னும் மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. பாராளுமன்றச் செயலர்கள் நியமன விவகாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்துவருகிறது கெஜ்ரிவால் அரசு. இதற்குமுன் ஆண்ட காங்கிரஸ், பாஜக அரசுகளில்கூட பாராளுமன்றச் செயலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் சம்பளம் உட்பட பல சலுகைகளை அனுபவித்திருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படி பாராளுமன்றச் செயலர் பதவி வகிப்பது, ஆதாயம்தரும் மற்றொரு பதவியை வகிப்பதற்குச் சமமாகும். ஆனாலும், காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏ-க்கள் பாராளுமன்றச் செயலர் பதவியை வகித்தது எந்த சர்ச்சைக்கும் உள்ளாகவில்லை. ஆனால், கெஜ்ரிவால் அரசு 21 பாராளுமன்றச் செயலர்களை நியமித்தது சர்ச்சையாக்கிவிட்டது. அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை, சலுகைகளும் இல்லை. அவர்களது நியமனம் ‘ஆதாயம்தரும் பதவியாக கருதப்படக்கூடாது’ என்றநோக்கில் உரிய சட்டத்திருத்தம்மூலம் முறைப்படுத்த விரும்பினார் கெஜ்ரிவால். அப்படி நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்காததால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துவிட்டது.

‘அவர்கள் வகித்தது ஆதாயம்தரும் பதவிதான்’ என்று, தேர்தல் கமிஷனில் பாஜக கொடுத்த புகாரின்மீது முடிவு எடுக்கப்பட இருக்கிறது. தேர்தல் கமிஷன் 21 சட்டமன்ற உறுப்பினர்களை இந்த அடிப்படையில் தகுதிநீக்கம் செய்தால் கெஜ்ரிவால் அரசு கவிழாவிட்டாலும் செல்வாக்கு சரியும்; கட்சியில் குழப்பம் வரும். “இதை, இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று காத்திருக்கிறார்கள் பாஜக பிரமுகர்கள். இந்த விவகாரத்தில் சட்ட நிபுணர்களின் கருத்தும் பிளவுபட்டுத்தான் இருக்கிறது.

கெஜ்ரிவால் அரசு பதவியேற்றபின், மின்னணு நிர்வாகம் மற்றும் பொதுச் சேவை தொடர்பாக அதிகாரிகளுக்கு கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டநிலையில், மக்களுக்கு சிரமங்கள் பெருமளவு குறைக்கப்பட்டிருப்பதாக அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள். அதிகாரிகள் மட்டத்தில் ஊழல் அறவே ஒழிக்கப்படாவிட்டாலும் முன்பைவிடக் குறைந்திருப்பதாகவே தலைநகர் மக்கள் சொல்கிறார்கள். பொது சேவைக்கு அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ பணம் கேட்டால் புகார்களைத் தெரிவிக்க தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கிறது. அரசு நிர்வாகத்தில் சிறிதும் ஊழல் தலை தூக்கக்கூடாது என்ற முனைப்புடன் கெஜ்ரிவால் அரசு செயல்படும் அதேசமயம், முன்பு நடைபெற்ற ஊழல்களுக்கு பொறுப்பானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் தயங்குவதில்லை. டெல்லி கிரிக்கெட் சங்க விவகாரத்தில் நடந்த முறைகேடுகளின்மீது டெல்லி அரசு நடவடிக்கை திட்டமிட, அதுபோன்ற விசாரணை, நிதியமைச்சர் ஜெட்லிக்கு சங்கடங்களைத் தருமோ! என்ற சந்தேகத்தில் ஏதோ ஒரு காரணம் சொல்லி, கெஜ்ரிவாலின் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்ற முயற்சி செய்தது. ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தபோது தண்ணீர் லாரிகள் வாங்கியதில் ஊழல் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதைப்பற்றி அரசு விசாரிக்க முடிவெடுத்தநிலையில் கெஜ்ரிவால் மீதும் இதுதொடர்பாக ஊழல் ஒழிப்பு காவல்துறையிடம் புகார் கொடுத்திருக்கிறது பாஜக. ‘இது என்ன புதுக்கதை’ என்று விசாரித்ததில், ஷீலா தீட்சித்மீதுள்ள புகாரை விசாரித்த குழு தந்த அறிக்கைமீது கெஜ்ரிவால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையாம். அதனால்தான் புகாராம்!. ஆனால், இந்த ‘உள்’ விவகாரத்தைப் பார்க்க பொதுமக்களுக்குப் பொறுமை இல்லாததால், ஏதோ கெஜ்ரிவால் அரசே தண்ணீர் லாரிகள் வாங்குவதில் ஊழல் செய்திருப்பதாக தோற்றம் தரப்படுகிறது. இதற்கு மீடியாக்களும் லாலி பாடுகின்றன.

இப்படியாக, பலவிதங்களில் கெஜ்ரிவால் அரசை பாஜக படாதபாடுபடுத்தினாலும். எதிரணியிடம் மாட்டிக்கொண்ட கபடி வீரர் விடுபட போராடி, நடுக்கோட்டைத் தொடர முயற்சிப்பதுபோல, டெல்லி அரசும் வெவ்வேறு துறைகளில் சாதனைகள் படைத்துவருகிறது.

குறிப்பாக, வணிக வரித் துறையைச் சொல்லலாம். பொதுவாக, வணிக வரித் துறையை ஊழலின் ஊற்றுக்கண் என்பார்கள். எந்த ஒரு மாநில அரசிலும், வருவாயில் குறைந்தது ஐம்பது சதவிகிதம் வணிகவரி வசூல் மூலம்தான் கிடைக்கும். ஆனால், இந்தத் துறையில் ஊழல், வரி ஏய்ப்பு காரணமாக வருவாய் குறைகின்றபோக்கே நிலவும். ஆனால், கெஜ்ரிவால் செய்த சீர்திருத்தங்கள் காரணமாக, டெல்லி அரசின் வருவாய் அதிகரித்திருப்பதுடன் ஊழலும் ஒழிக்கப்பட்டிருக்கிறது. கடையில் பொருட்களை வாங்கும்போது கொடுக்கும் பில்லை அரசு ஏற்படுத்தியுள்ள செல்போன் app மூலம் அரசுக்கு அனுப்ப வேண்டும். இதன்மூலம், குறிப்பிட்ட கடை வரி வசூலித்திருக்கிறதா என்பது மட்டுமல்லாமல் வரி எண்ணை அது பெற்றிருக்கிறதா… இல்லை, வரி எண் இல்லாமலேயே விற்பனையில் ஈடுபட்டிருக்கிறதா போன்ற விவரங்கள் தெரியவரும். இப்படி பில்களை அனுப்பும் மக்களுக்கு தகுந்த சன்மானமும் உண்டு. அந்த பில்களை வைத்துக்கொண்டு மேல் நடவடிக்கைகளில் வணிக வரி அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள். இத்திட்டப்படி, கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ரூபாய் இரண்டு கோடி வசூலாகி இருக்கிறது. பொதுமக்களுக்கு சன்மானமாக ரூபாய் 27 லட்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, வணிக வரி வசூலில் சாதனை படைக்கும் அதிகாரிகளுக்கு முதல்வரே நேரடியாக ஊக்கத்தொகை வழங்குகிறார். பொதுமக்களிடம் பில்களைப் பெற்று வரி வசூலில் உள்ள ஓட்டைகளை அடைத்து, வருவாயைப் பெருக்கும் இதுபோன்ற திட்டத்தை நாட்டிலேயே முதன்முதலாக செயல்படுத்திவருவது ஆம் ஆத்மி அரசுதான்.

ஜெயலலிதா அரசும் இதுபோன்ற முறையை கடைப்பிடிக்க வேண்டும். பில்லுக்குப் பதிலாக எஸ்டிமேட் என்ற சிறு துண்டுச் சீட்டை கொடுத்து, கோடிக்கணக்காக வரி ஏய்ப்பு செய்துகொண்டிருக்கும் தியாகராய நகர் வணிகர்கள் இதில் சிக்குவார்கள். இதுபோன்ற திட்டம் மட்டுமல்ல; தேர்தலின்போது வாக்களித்தபடி மாதம் 2௦௦ யூனிட்டுக்குக் கீழே உபயோகிப்பவர்களுக்கு மான்ய கட்டணத்தில் மின்சாரம், மாதம் 2௦ கிலோ லிட்டர் வரை குடிநீர் உபயோகித்தால் தண்ணீர் கட்டணம் கிடையாது என்ற பல நடவடிக்கைகள் அடித்தட்டு மக்களை சந்தோஷப்படுத்துகின்றன.

தற்போது, டெல்லியில் பள்ளிக் கல்வியில் பல ஆக்கபூர்வமான செயல்பாடுகள் அமலுக்கு வந்திருக்கின்றன. இதனால் தேர்ச்சிவிகிதம் அதிகமாகியிருக்கிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அனைத்தும் வங்கிக் கணக்குக்குச் செல்கின்றன. போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் தொல்லைகளிலிருந்து ஆட்டோ ஒட்டுநர்களுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. பாலங்கள் கட்டுவதில் அரசு காட்டிய முன் திட்டமிடலும், சிக்கன நடவடிக்கைகளும் கோடிக்கணக்கான ரூபாயை அரசுக்கு மிச்சப்படுத்திக் கொடுத்திருக்கின்றன. இந்தத் தொகையை அரசு மருத்துவமனைகளில் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்த இருக்கிறார்கள். வரி ஏய்ப்பு விஷயத்தில் கெஜ்ரிவாலின் உறுதியான நடவடிக்கைகள் வர்த்தகர்களை கடுப்பேற்றியிருப்பது எதிர்பார்த்ததே. காரணம், பெரும்பாலான வணிகர்கள் பாஜக ஆதரவாளர்கள். ஆகையால் அரசுக்கு எதிராகப் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று வரும்போது அணி திரள்கிறார்கள். இத்தகைய சூழலில் போராடி வருகிறார் கெஜ்ரிவால்.

ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் மூன்றுபேர் கொண்ட குழு ஆம் ஆத்மி அரசை கவிழ்ப்பதற்கான யுக்திகளை வகுக்கிறதாம். இதுபோன்ற சவால்களை சந்தித்துக்கொண்டு அரசியல்ரீதியாக தனது சிறகுகளை விரிக்கவும் தயாராகிவருகிறது ஆம் ஆத்மி. பஞ்சாபில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கணிசமான இடங்களைப் பிடிக்கும் என்று அங்கிருந்துவரும் திடமான தகவல்கள் சொல்கின்றன. பஞ்சாபை அடுத்து கோவா, குஜராத் என்று தன் இலக்கை வைத்திருக்கிறார் கெஜ்ரிவால். டெல்லியில் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் வழக்கமான பத்திரிகையாளர்கள் சந்திப்புக்குப்பிறகு மூத்த பத்திரிகையாளர்களிடம் மனம் விட்டு வெளிப்படையாகப் பேசுவதுண்டு. இதை ‘de-briefing’ என்பார்கள். அப்படிப்பட்ட ஒரு சந்திப்பில், ஒரு சீனியர் காங்கிரஸ் பிரமுகர் ‘பஞ்சாப் தேர்தலுக்குமுன்பாக ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்கவும், கெஜ்ரிவாலின் செல்வாக்கை வீழ்த்தவும் பாஜக கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும்’ என்கிறார். இப்போது அரங்கேறும் காட்சிகளைப் பார்க்கும்போது இது பளிச்சென்று தெரிகிறதே!�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *