தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை ஊழியர்கள் 13வது ஊதிய உயர்வு ஒப்பந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இன்று மே 16ஆம் தேதி இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
போக்குவரத்துத் துறை ஊழியர்களின் 13வது ஊதிய உயர்வு ஒப்பந்தம், ஓய்வு பெற்ற ஊழியர்களின் நிலுவையிலுள்ள பணப்பலன் மற்றும் பணியிலுள்ள ஊழியர்களின் நிலுவையிலுள்ள அகவிலைப்படி உள்ளிட்டவைகளை தமிழக அரசு உடனடியாக அளிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், உயர் அதிகாரிகள், போக்குவரத்துத் துறை தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நடத்திய மூன்று கட்ட பேச்சுவாரத்தைகளும் தோல்வியடைந்தன. இதையடுத்து மே 14ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு தமிழக அரசு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.7000 கோடியை முழுவதுமாக அளிக்க வேண்டும் என்று தொழிற்சங்க பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக அரசு ரூ.750 கோடி அளிப்பதாகவும் முதல் கட்டமாக ரூ.500 கோடி அளிப்பதாகவும் கூறினார். இதை ஏற்க மறுத்த தொழிற்சங்க பிரதிநிதிகள் மே 15 முதல் தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். இருப்பினும், மே 14ஆம் தேதி மாலையே வேலை நிறுத்தம் தொடங்கிவிட்டது.
இந்த வேலை நிறுத்தத்தால் நேற்று மே 15, திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் 30 சதவிகித பேருந்துகளே இயக்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டனர். சென்னையில், போக்குவரத்தை சமாளிக்க வெளியூரிலிருந்து தனியார் மற்றும் மினி பேருந்துகள் வரவழைக்கப்பட்டு இயக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று மே 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை போக்குவரத்துத் துறை ஊழியர்களின் வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. தற்போது ஆளும் கட்சியின் அண்ணா தொழிற்சங்க ஊழியர்களின் ஒரு பிரிவினர் மட்டுமே பேருந்துகளை இயக்கிவருகின்றனர். இவர்களைக் கொண்டு மட்டுமே போக்குவரத்தை சமாளிக்க முடியாது என்பதால், தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், தனியார் பேருந்துகள், மினி பேருந்துகள், தனியார் பள்ளி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் தற்காலிக ஓட்டுநர்களாகவும், நடத்துநர்களாகவும் பணிபுரிபவர்கள், சென்னை மாநகர வழித்தடத்துக்கு புதியவர்கள் என்பதால் வழி தெரியாமலும், பேருந்து நிறுத்தம் தெரியாமலும் தடுமாறி வருகின்றனர். அதே போல, பயணச் சீட்டுக் கட்டணத்தையும் தெரியாமல் கூடுதலாக வசூலித்து வருகின்றனர். இதனால், அவதிக்குள்ளாகும் மக்கள் நடத்துநர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்ரனர்.
இது குறித்து சென்னையில், மினி பேருந்து நடத்துநர் ஒருவர் கூறுகையில், **சென்னையில் வந்து பஸ் ஓட்டுவதால் நாங்கள் ஏற்கெனவே பஸ் ஓட்டிய பகுதி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எங்களுக்கு ரூட்டும் தெரியவில்லை. பஸ் ஸ்டாப்பும் தெரியவில்லை. அதற்கு மக்கள் எங்களைத் திட்டுகிறார்கள். நாங்கள் என்ன செய்வது? எங்கள் வட்டார ஆர்.டி.ஓ. சென்னைக்கு அனுப்பியிருக்கிறார். நாங்கள் நாளைக்கு பஸ் எஃப்சி செய்ய வேண்டும் என்றால், ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு அவர்களிடம்தான் செல்ல வேண்டும். அதனால், அவர்கள் கூறுகிறபடி சென்னையில் பஸ் ஓட்ட வேண்டியிருக்கிறது** என்று கூறினார்.
இது குறித்து அரசு போக்குவரத்துத் துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், இந்த மினி பஸ், மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அரசின் மீது வழக்கு தொடர வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், தமிழக அரசு நினைத்தால் அவர்களை அழைத்து பேருந்துகளை இயக்குகிறது. வேண்டாமென்றால், திருப்பி அனுப்புகிறது. இதனால், தாங்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் தமிழக அரசின் மீது வழக்கு தொடரலாம் என்று கூறினார்.
�,”