போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் குறித்து புகார் தெரிவிக்கும் இ-ஐ செயலியை இதுவரை 12,000 பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகக் கோவை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க, காவல் துறை சார்பில் இ-ஐ எனும் செயலி கடந்த ஜனவரி 7ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக, சாலையில் விதிகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களைப் பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் எடுத்து அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இது பற்றி தினத்தந்தியில் இன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கோவை மாநகரக் காவல் துறை சார்பில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இ-ஐ செயலியை இதுவரை 12,000 பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்தார் கோவையைச் சேர்ந்த ஒரு போக்குவரத்துக் காவல் துறை அதிகாரி. பிளே ஸ்டோர் மூலம் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து, தங்களது செல்போன் எண்ணைப் புகார் தெரிவிப்பவர்கள் பதிவு செய்யலாம் என்று கூறினார்.
“போக்குவரத்து விதிகளை மீறிச் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களைப் பொதுமக்கள் தங்களது செல்போனில் உள்ள லொக்கேசன் செட்டிங்கை ஆன் செய்து புகைப்படம் எடுத்துப் பதிவேற்றம் செய்யலாம். புகைப்படம் எடுக்கப்பட்ட இடம், நேரம், அனுப்பியவரின் பெயர், மொபைல் எண் ஆகியன போக்குவரத்துக் காவல் துறை அலுவலகத்தில் பதிவாகி விடும். இதையடுத்து போக்குவரத்து விதிமீறல் குறித்த விவரங்கள், அபராதத் தொகை ஆகியவை தானாகக் கணக்கீடு செய்யப்பட்டு அதற்கான ரசீதும் அச்சாகி விடும். இதைக் கண்காணிப்பதற்காக 10 குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் போக்குவரத்து விதிமீறல் பற்றிய 7,988 புகைப்படங்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளன. இதை ஆய்வு செய்த கண்காணிப்புக் குழுவினர், அவற்றில் 3,370 பேர் போக்குவரத்து விதிகளை மீறியிருந்ததைக் கண்டுபிடித்தனர். வாகன எண் தெளிவாகத் தெரியாததால் 4,370 புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இ-ஐ செயலியின் மூலமாக, இதுவரை 11 லட்சத்து 89 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.�,