அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு போக்குவரத்து துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்து ஊழியர்களின் 13-வது ஊதிய ஒப்பந்தம், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவை தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 15ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. அரசு நடத்திய பேச்சு வார்த்தையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தற்போது போராட்டத்தில் பங்கேற்ற அண்ணா தொழிற்சங்க நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்குப் பணி வழங்க மறுத்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மாயாண்டி(83) என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில், தான் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் கடந்து விட்டது. இருப்பினும் தனக்கு ஓய்வூதிய தொகை வழங்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் நிலைகுறித்து விசாரணை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. அதன்படி இவ்வழக்கு விசாரணை இன்று மே-26 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் முரளிதரன் கார்த்திகேயன் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை எவ்வளவு? என்பது குறித்து வரும் மே-30ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனப் போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டனர்.�,