பொள்ளாச்சி கொடூரம் விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்புவதாக பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சியில் பெண்களிடம் நட்பாகப் பழகி அவர்களை நயவஞ்சமாக பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஒரு கும்பல் ஈடுபட்டு அதை வீடியோவாகப் பதிவு செய்த கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டமன்றத் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களைச் சம்பந்தப்படுத்தி சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.
ஆனால், இந்த விவகாரத்தை வெளிக்கொண்டு வந்ததே தான்தான் என்றும், தனக்கோ தன் குடும்பத்துக்கோ இதில் எவ்வித சம்பந்தமுமில்லை என்றும், ஸ்டாலின் மருமகன் சபரீசன் தூண்டுதலின் பேரில் தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுகிறது என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியிருந்தார்.
தொடர்ந்து, தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் விதத்தில் திட்டமிட்டு சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக சபரீசனுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரை சைபர் க்ரைம் போலீசுக்கு டிஜிபி அலுவலகம் அனுப்பி வைத்தது.இதன்பேரில் சபரீசன் மீது நேற்று (மார்ச் 14) சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றவழக்கு எண் 97/2019 என்ற பெயரில் சபரீசன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதுபோலவே ஜெயராமன் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை எழும்பூரிலுள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு சைபர் க்ரைம் காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
**ஜெயராமனுக்கு சபரீசன் வக்கீல் நோட்டீஸ்**
இந்த நிலையில் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சபரீசன் தரப்பிலிருந்து வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், சபரீசன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டியளித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டால் சபரீசன் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.�,