பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறை அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
பொள்ளாசியில் இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதாகப் புகார் அளிக்கப்பட்ட வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் புகார் அளித்த பெண்ணின் பெயரைச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன். இதனையடுத்து, இந்த வழக்கு பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர் சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையிலும் பாதிக்கப்பட்டவரின் பெயர், அவர் பயிலும் கல்லூரி போன்றவை குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடுக்கப்பட்ட வழக்கில், காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்தது.
தற்போது கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மாற்றம் செய்யப்பட்டு, சுஜித்குமார் புதிய கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, தமிழக உள் துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆணை பிறப்பித்துள்ளார். பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயராம் மற்றும் பொள்ளாச்சி ஆய்வாளர் நடேசன் ஆகியோரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பதிலாக துணைக் காவல் கண்காணிப்பாளர் பதவியில் சிவகுமார் என்பவரும், ஆய்வாளராக வெங்கட்ராமன் என்பவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மூவரும் எந்த இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரம் குறிப்பிடப்படாததால், இவர்கள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.�,