பொள்ளாச்சி வழக்கு: புதிய அரசாணை வெளியிட உத்தரவு!

Published On:

| By Balaji

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றியது தொடர்பாக புதிய அரசாணையை வெளியிடுமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

கடந்த 24ஆம் தேதியன்று பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மீது புகார் அளித்தார் ஒரு மாணவி. இதையடுத்து நால்வரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் சட்டம் செலுத்தப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அதன்பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இது குறித்து, நேற்று (மார்ச் 14) தமிழக அரசின் உள் துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டது.

இதில் புகார் அளித்த பெண்ணின் பெயர், அவர் படிக்கும் கல்லூரி, அவரது சகோதரர் பெயர் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இன்று (மார்ச் 15) இந்த வழக்கை விசாரணை செய்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. அப்போது, புகார் அளித்த பெண்ணின் பெயர், அடையாளங்களை நீக்கிவிட்டு, பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவது தொடர்பாக புதிய அரசாணையை வெளியிடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த பாலியல் புகார் தொடர்பான விடியோக்களை இணையதளங்களில் இருந்து நீக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share