பொள்ளாச்சி வழக்கு: சிபிஐக்கு மாற்றிய அரசாணையில் விதிமீறல்!

Published On:

| By Balaji

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐக்கு மாற்றுவது தொடர்பான அரசாணையில் விதிமீறல் உள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், நேற்று (மார்ச் 14) இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டனர் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையிலான தனிப்படையினர். இந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் இருந்து சிபிஐக்கு மாற்றப்படுவதாக அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. இந்த அரசாணையில் புகார் அளித்த பெண், அவர் படிக்கும் கல்லூரி, அவரது சகோதரர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன. பாலியல் புகார் அளிக்கும் பெண் தொடர்பான விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மாறாக இது அமைந்திருப்பதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர் சமூக ஆர்வலர்கள்.

கடந்த வாரம் இந்த வழக்கு தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்புகளின்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அவரது சகோதரர் பெயரைக் குறிப்பிட்டார் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன். இது விமர்சனத்துக்குள்ளான நிலையில், அரசாணையில் இந்த விவரங்கள் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

**ஸ்டாலின் எதிர்ப்பு**

தமிழக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். “பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளிப்படுத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் கடுமையான அறிவுறுத்தலை பொள்ளாச்சி விவகாரத்தில் மீறிவிட்டது அதிமுக அரசு. இனி யாரும் புகார் கொடுக்கக் கூடாது என மிரட்டுகிறதா? குற்றவாளிகளைக் காப்பாற்றத் தொடரும் ஆளுந்தரப்பின் கபடநாடகம்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

**கமலின் கேள்விகள்**

அரசாணையில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான எனது கேள்விகள்?’ என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அம்மா வழியில் ஆட்சி செய்யும் அரசு பொள்ளாச்சி விவகாரத்தில் எப்படி மெத்தனமாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். “வீடியோக்களை குற்றவாளிகள் அழித்துவிட்டதாகக் கூறும் நிலையில் எப்படி வெளியானது? பெண்ணைப் பெற்ற எல்லோருக்கும் பதறுகிறதே, உங்களுக்குப் பதறவில்லையா? குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும், கட்சிக்கும் தொடர்பு இல்லை எனக் கூறுவதில் உள்ள மும்முரம், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குத் தண்டனையை அரசு உறுதி செய்யும் எனக் கூறுவதில் இல்லையே ஏன்?” என்று அந்த வீடியோவில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் எந்தக் கருத்தையும் பகிரக் கூடாது என்று மிரட்டல் விடுக்கும் நோக்கில், அவர்கள் தொடர்பான வீடியோக்கள் தொடர்ச்சியாக வெளியிடப்படுகின்றனவா என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளன எதிர்க்கட்சிகள்.

**பாதிக்கப்பட்டவரே கஷ்டப்படும் நிலை**

இது தொடர்பாக வழக்கறிஞர்கள் தரப்பை அணுகிப் பேசினோம். பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது மிகவும் தவறானது என்று தெரிவித்தார் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கனிமொழி மதி. தமிழகப் பெண்கள் இயக்கம் என்ற அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான இவர், “பாலியல் அத்துமீறலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைப் பொதுவெளியில் வெளியிடக் கூடாது. புகார்தாரர் என்பதால் கோப்புகளில் மட்டும் அவர்களது பெயர்கள் இருக்கும். நீதிமன்றத்தில் மட்டுமல்ல, வேறெங்கும் அதனை வெளியிடக் கூடாது” என்று கூறினார்.

பாலியல் கொடுமை புகார் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகினாலும், காவல் நிலையத்தை அணுகினாலும், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் கஷ்டப்படும் நிலையே உள்ளது என்றும் தெரிவித்தார். “தொடர்ந்து பெண்கள் உடல் சார்ந்து துன்பப்படும்போது, அது வாழ்க்கை முழுக்கப் பாதிப்பை ஏற்படுத்தும். மன உளைச்சலைத் தரும். திருவள்ளூர் மாவட்ட ஏரியொன்றில் சிறுமி ஒருவரது உடல் எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திலும், அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரைக் காவல் நிலையத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. சமீபத்தில் கும்பகோணம் வந்த ராஜஸ்தான் பெண் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான வழக்கிலும், அவரது புகார் முதலில் பதிவு செய்யப்படவில்லை. இவ்வாறு தொடர்ந்து நிராகரிக்கப்படுவது பெண் சமூகமே நிராகரிக்கப்படுவது போலத் தான்” என்றார் கனிமொழி மதி. உடல் சார்ந்த பாதுகாப்பு இல்லையென்றால், பெண்களால் எங்குமே போக முடியாதே என்றும் கேள்வி எழுப்பினார்.

**புகார்தாரர் பாதுகாப்பு**

“பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து, சில வழக்கறிஞர்கள் இணைந்து பொதுநல மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். இதில் பெண் மற்றும் சில ஆண் வழக்கறிஞர்களும் அடக்கம். தமிழகத்தில் ஒவ்வொரு நகரத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பான இடங்களை உருவாக்க வேண்டும். பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகே, இரவு நேரத்தில் தனியாக வரும் பெண்கள் தங்கியிருந்து செல்லுமாறு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக சமூகநீதித் துறையின் கீழ் ஓர் இயக்குநரை உருவாக்கி, ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டில் இது இயங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தோம். மூன்று மாதங்களுக்கு முன்பு தொடரப்பட்ட இந்த வழக்கு, கடந்த வாரம் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அதில் எல்லாவற்றையும் குறிப்பிட்டிருந்ததால், இன்று (நேற்று) பாலியல் புகார் தரும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை, வழக்கின் முடிவில் அவர்களுக்கு முழுமையான நியாயம் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை உயர்மட்ட சட்டக் குழு ஒன்றை அமைத்துக் கண்காணிக்க வேண்டுமென்று மிஸ்செலினியஸ் பெட்டிஷன் பதிவு செய்தோம். உயர் நீதிமன்றத்திலுள்ள நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு இதனை அமைக்க வேண்டுமென்று தலைமை நீதிபதியிடம் கூறினோம். ஆனால், இது விசாரணை தொடர்பானது என்று கூறி, அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார்” என்று கூறினார் கனிமொழி மதி.

இதனால், வேறு நீதிமன்றம் அல்லது நீதிபதிகள் மூலமாக இந்த முயற்சிகளைத் தாங்கள் தொடரப் போவதாகத் தெரிவித்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share