பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதாக அரசாணை வெளியான நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு வீட்டில் இன்று விசாரணை மேற்கொண்டுள்ளனர் சிபிசிஐடி போலீசார்.
பொள்ளாச்சி எம்ஜிஆர் நகர் சபரிராஜன் என்ற ரிஸ்வந்த், மாக்கினாம்பட்டி திருநாவுக்கரசு, சூளேஸ்வரன்பட்டி சதீஷ், பக்கோதிபாளையம் வசந்தகுமார் ஆகியோர் மீது, கடந்த மாதம் 24ஆம் தேதியன்று பாலியல் புகார் அளித்தார் ஒரு இளம்பெண். பொள்ளாச்சி கிழக்கு போலீசாரால் நால்வரும் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வெளியான வீடியோவொன்றில், இவர்களால் இரண்டு இளம்பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இது குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த வழக்கில் நேர்மையான விசாரணை வேண்டுமென்று தெரிவித்தன.
கடந்த 12ஆம் தேதியன்று குற்றம்சாட்டப்பட்டுள்ள நால்வர் மீது குண்டர் சட்டம் ஏவப்படுவதாக அறிவித்தார் கோவை ஆட்சியர் ராஜாமணி. இதன்பின், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர், இந்த வழக்கை எஸ்பி நிஷா பார்த்திபன் மற்றும் 5 ஆய்வாளர்கள் உள்ளடக்கிய குழு விசாரிக்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து, திருநாவுக்கரசு குடும்பத்துக்குச் சொந்தமான சின்னப்பம்பாளையம் பண்ணைவீட்டை நேற்று ஆய்வு செய்தனர் சிபிசிஐடி போலீசார். விரைவில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவிருப்பதாகத் தெரிவித்தார் ஸ்ரீதர்.
இன்று (மார்ச் 14) காலையில் இந்த வழக்கு சிபிசிஐடி வசமிருந்து சிபிஐக்கு மாற்றப்படுவதாக அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு. ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளச் சேவைகளிடம் இருந்து தகவல் பெற வேண்டிய தொழில்நுட்பத் தேவைகள் இருப்பதால், இந்த முடிவை மேற்கொள்ளுமாறு தமிழக டிஜிபி பரிந்துரை செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையிலும், இரண்டாவது நாளாகச் சோதனையைத் தொடர்ந்தனர் சிபிசிஐடி அதிகாரிகள். மாக்கினாம்பட்டியிலுள்ள திருநாவுக்கரசு வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர் இங்கு அவரது பெற்றோர் இருந்து வருகின்றனர். அவர்களிடம் 2 மணி நேரம் வரை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக, இன்று சிபிசிஐடி தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
**சிபிசிஐடி வேண்டுகோள்**
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விவரம் அறிந்தவர்கள், இதில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சிபிசிஐடி.
இது பற்றிப் புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் கோவை காவல் துறை துணைக் காண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேரில் வரலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அலுவலக முகவரியும் தரப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வாட்ஸ் அப் வழியாகப் புகார் அளிப்பவர்கள் 9488442993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும், cbcidcbecity@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் முக்கியத்துவம், பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி இது தொடர்பான புகைப்படங்களையோ, வீடியோக்களையோ யாரும் சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் என்றும், தகவல் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் கோவை மாவட்ட சிபிசிஐடி போலீசார்.
**பார் நாகராஜ் மறுப்பு**
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாகப் புகார் அளித்த பெண்ணின் சகோதரரைத் தாக்கிய வழக்கில் 5 பேர் பொள்ளாச்சி கிழக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் பொள்ளாச்சி அதிமுக பிரமுகர் பார் நாகராஜும் ஒருவர். இவருக்குக்கும் இந்த வழக்கில் தொடர்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், நேற்று (மார்ச் 13) பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பாக இரண்டு வீடியோக்கள் தொலைக்காட்சிகளில், சமூக வலைதளங்களில் வெளியானது. இதில் இருப்பது பார் நாகராஜ் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று அவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் சென்று மனு அளித்தார். இதையடுத்துச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவர், இந்த பாலியல் புகாருக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்தார். தன்னைப் பற்றி தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.
“செக் மோசடி செய்தது தொடர்பாகப் பேச வேண்டும் என்று கூறி தான், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரிடம் பேச என்னை அழைத்துச் சென்றனர். ஆனால், சமூக வலைதளங்கள், ஊடகங்களில் என்னைப் பற்றி தவறான தகவல் பரப்பப்படுகிறது. அந்த ஆபாச வீடியோவில் இருப்பது நான் இல்லை. இந்த வழக்கு என்னையும் என் குடும்பத்தினரையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது” என்று அவர் கூறினார்.
**தொடரும் மாணவர்கள் போராட்டம்**
கடந்த இரண்டு நாட்களாக, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர் கல்லூரி மாணவர்கள். நேற்று பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் அருகே கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, மாணவர்களை போலீசார் கைது செய்யவிடாமல் தடுக்கும் வகையில் மாணவிகள் அரணாக நின்றனர். அதையும் மீறி வலுக்கட்டாயமாக மாணவர்களை போலீசார் இழுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இன்றும் போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர் மாணவர்கள். இந்த நிலையில், பொள்ளாச்சி வட்டாரத்திலுள்ள 7 கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இன்றும் கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். தஞ்சாவூரிலுள்ள குந்தவை நாச்சியார் மகளிர் அரசு கலைக் கல்லூரி மாணவிகள், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை விதிக்கக் கோரி போராட்டம் மேற்கொண்டனர். உடுமலைப்பேட்டையிலுள்ள கல்லூரி ஒன்றிலும் மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகமெங்கும் கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டத்தைத் தொடர்ந்துவரும் நிலையில், இந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மாலை பொள்ளாச்சியில் அனைத்து அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.�,