மத்திய அரசு கடந்த 26 ஆம் தேதி நாடு முழுவதும் இறைச்சிக்காக மாட்டை சந்தைகளில் விற்கக் கூடாது என்று புது ஆணைப் பிறப்பித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நடவடிக்கையால் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள மாட்டுச் சந்தையில் வாரத்திற்கு ரூ.7 கோடிவரை வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி மாட்டுச் சந்தை தென்னிந்தியாவில் மிகப்பெரிய மாட்டுச் சந்தையாகும். இங்கு வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாடு விற்பனை நடைபெறுகிறது. இந்த மாட்டுச் சந்தையில் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும் மாடுகளைக் கொண்டு வந்து விற்பார்கள். இங்குக் கொண்டு வரப்படும் மாடுகளில் காளை, எருமை, பசு, கன்று உள்ளிட்ட மாடுகளை இறைச்சிக்காகத் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பலர் வாங்கிச் செல்கின்றனர்.
தற்போது சந்தைகளில் இறைச்சிக்கான மாடுகளை விற்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவு போட்டுள்ளதால் பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் விற்பனை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொள்ளாச்சி மாட்டு வியாபாரிகள் கூறியதாவது, ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சுமார் 2 ஆயிரம் முதல் 2500 வரையிலான மாடு விற்பனைக்காக இங்குக் கொண்டுவரப்படுகிறது. அதிகளவில் கேரள வியாபாரிகளே மாடுகளை வாங்கிச் செல்கின்றனர்.
வாரந்தோறும் சுமார் ரூ.7 கோடி வரை இங்கு வியாபாரம் நடக்கிறது. மத்திய அரசின் தற்போதைய தடை உத்தரவால் மாட்டு வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தொழிலையே நம்பியிருக்கும் மாட்டு வியாபாரிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள், மாடுகளை ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள், தரகர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படும். மேலும், கால்நடை வளர்ப்பை அடிப்படையாகக் கொண்ட கிராமப்புற மக்களின் பொருளாதாரமும் அடியோடு பாதிக்கப்படும். எனவே, மத்திய அரசு இந்தத் தடை உத்தரவை உடனே திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால், மாட்டு வியாபாரிகள் சங்கம் சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் வெடிக்கும்” என்று தெரிவித்தனர்.�,”