மாணவிகள், இளம்பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்களைக் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக, இன்று (மார்ச் 13) மாநிலமெங்கும் பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்திலுள்ள கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இன்று காலை முதல் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தனர் போலீசார். இதற்காக மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முயற்சியில் இறங்கினர் போலீசார்.
அப்போது, மாணவர்களைச் சுற்றிலும் மாணவிகள் அரணாக நின்று போராடினர். போலீசார் அவர்களை இழுத்துச் சென்றனர். அவர்களை காவல் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் மாணவர்களை இழுத்துச் சென்றாலும், அந்த இடத்தில் மாணவிகள் சிலர் ‘பெண்களை வாழ விடு, பெண்களுக்குப் பாதுகாப்பு கொடு’ என்பது உள்ளிட்ட முழக்கங்களைத் தொடர்ச்சியாக எழுப்பினர்.
**சிபிசிஐடி விசாரணை**
பொள்ளாச்சி வழக்கு குறித்து, கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்திலுள்ள விருந்தினர் மாளிகையில் காவல் துறை சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர், எஸ்பி நிஷா பார்த்திபன், கோவை எஸ்பி பாண்டியராஜன், பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராமன் ஆகியோர் இதில் பங்கேற்றனர். இதன் பிறகு சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்த வழக்கை சிபிசிஐடி எஸ்பி நிஷா பார்த்திபன் விசாரணை செய்வார் என்று கூறினார். “அவருக்கு உதவியாக 5 ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும். கோவை காவல் துறை அளித்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும். குற்றம்சாட்டப்பட்டவர்களின் செல்போன்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்படும்” என்று தெரிவித்தார்.
குண்டர் சட்டம் ஏவப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் நால்வரிடமும் விரைவில் விசாரணை நடைபெறும் என்று அவர் கூறினார்.
**டிஜிபிக்கு நோட்டீஸ்**
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. “பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் தேவை. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கவும்” என்று அந்த நோட்டீஸில் மகளிர் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
�,