பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவதாகத் தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் 24ஆம் தேதியன்று பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு கல்லூரி மாணவியும் அவரது சகோதரரும் புகார் அளித்தனர். ஃபேஸ்புக் மூலமாக வலை விரித்து பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்களைப் பண்ணை வீட்டுக்கு வரவழைத்து, அவர்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மீது புகார் தெரிவித்தனர். இது தொடர்பாகச் சில ஆதாரங்களையும் போலீசாரிடம் அளித்தனர். இதைத் தொடர்ந்து சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைதாகினர். கடந்த 5ஆம் தேதியன்று தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். இன்று, இவர்கள் நால்வர் மீதும் குண்டர் சட்டம் ஏவப்படுவதாக அறிவித்தார் கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி.
**சிபிசிஐடி விசாரணை**
இந்த நிலையில், இன்று (மார்ச் 12) இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது தமிழக டிஜிபி அலுவலகம். இதையடுத்து, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
**வழக்குரைஞர் கழகம் அறிவிப்பு!**
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வழக்குறிஞர்கள் யாரும் ஆஜராகமாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பொள்ளாச்சி பார் அசோசியேஷன் தலைவரும் வழக்குரைஞருமான ஈ.என்.துரையிடம் மின்னம்பலம் சார்பாகப் பேசினோம்.
“இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்த மறுநாள் காலை (பிப்ரவரி 25) எங்களுடைய சங்கத்தில் உள்ள 235 உறுப்பினர்களும் கூடி ஆலோசனை செய்தோம். மனிதத்தன்மையே இல்லாத கொடியவர்களாக நடந்துள்ள இந்த குற்றவாளிகளுக்காக நம்முடைய சங்கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் யாரும் ஆஜராகக்கூடாது என ஏகமனதாக முடிவெடுத்துள்ளோம். இவர்களுக்காக கோவை, உடுமலை போன்ற வெளியூரிலிருந்தும், தமிழகத்தின் வேறு பகுதியிலிருந்தும் வழக்குரைஞர்கள் யாரும் ஆஜராக வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளோம். அது போலவே, இந்த வழக்கை விசாரணை செய்துவரும் போலீசார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கடந்த வாரம் செவ்வாயன்று பாரதியார் கல்லூரியில் நடைபெற்ற ஒரு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், அவர்களின் நடமாட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் நேரடியாகக் காவல் நிலையத்தில் போய் புகார் கொடுக்கலாம். ஒருவேளை காவல் நிலையத்துக்குச் சென்றால் நம்முடைய பெயர், குடும்ப விபரங்கள் வெளியே தெரிந்துவிடும் எனப் பயப்படுபவர்கள் நேராக அட்வகேட்ஸ் அசோசியேஷனை அணுகுங்கள். உங்களுடைய பெயர் மற்றும் குடும்ப விபரங்கள் வெளியே வராமல், நீதிமன்றத்தில் கதவுகள் மூடப்பட்ட நிலையில் நீதிபதியின் முன்னிலையில் இன் கேமரா விதிகளின் படி உங்களின் வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்வார்.
அந்த பதிவுகளின் அடிப்படையில் எந்த மாதிரி விசாரணை செய்யவேண்டும் என நீதிபதி உத்தரவு போடுவார். அந்த உத்தரவுப்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்வார்கள் என்று சொன்னேன். அதற்குப் பிறகும் கூட இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை” என்று கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளையும், பாதுகாப்பான வழிகாட்டுதலையும் செய்ய பொள்ளாச்சி வழக்குரைஞர்கள் கழகம் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார் ஈ.என்.துரை.
**திருநாவுக்கரசு தாய் ஆவேசம்**
மற்ற மூன்று பேர் சார்பில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யாத நிலையில், இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு ஜாமீன் அளிக்க வேண்டுமென்று அவரது தாயார் லதா மனுதாக்கல் செய்தார். கடந்த 8ஆம் தேதியன்று குற்றவியல் நடுவர் மன்றத்தில் அவர் ஜாமீன் மனுவை அளித்துள்ளார். அன்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் எதிர் மனு போட அவகாசம் கேட்டதால், இன்று (மார்ச் 12) அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, திருநாவுக்கரசின் மனுவை நிராகரித்தது நீதிமன்றம்.
ஜாமீன் வழக்கு விசாரணைக்காகக் காத்திருந்தபோது, பொள்ளாச்சி நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்களிடம் ஆவேசமாகப் பேசியுள்ளார் லதா. அவரிடம் திருநாவுக்கரசுவைக் குறித்துப் பேசியுள்ளனர் அங்கிருந்த மக்கள். அதனைக் கேட்ட லதா தனது மகன் திருநாவுக்கரசு தப்பு செய்யவில்லை என்றும், அவனை வேண்டுமென்றே மாட்ட வைத்துவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். “யார் தப்பு செஞ்சது, என் பையன் தப்பு பண்ணலை. அவன் செல்போனில் எத்தனை பொண்ணுங்க போட்டோ இருக்கோ, அத்தனை பொண்ணுங்களையும் பிடித்து விசாரிங்க. என் பையன் மேல போட்டது பொய் கேஸ்” என்று அழுதவாறே கூறியுள்ளார் லதா.
�,”