பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் கொடுமை செய்த வழக்கில் இன்று முதல் சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஃபேஸ்புக் மூலமாக இளம்பெண்களிடம் பழகி, அவர்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய புகார் தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது நேற்று (மார்ச் 12) குண்டர் சட்டம் தொடுக்க உத்தரவிட்டார் கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி. இந்த விவகாரம் குற்றப் பிரிவு போலீசாரிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது தமிழக டிஜிபி அலுவலகம். இதன் தொடர்ச்சியாக, இன்று (மார்ச் 13) சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர், எஸ்பி நிஷா பார்த்திபன் ஆகியோர் பொள்ளாச்சி சென்றனர். இன்று முதல் உடனடியாக விசாரணை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
**மாணவர்கள் போராட்டம்**
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று திருச்சி மற்றும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.
பொள்ளாச்சி வட்டாரத்தைச் சேர்ந்த கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 1,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இன்று காலை பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெண்களை வாழ விடு, பெண்களுக்குப் பாதுகாப்பு கொடு என்ற முழக்கங்கள் போராட்டத்தில் எழுப்பப்பட்டன.
இன்று திருச்சி மாவட்டம் குண்டூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் 200 பேர் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் மாணவர்கள் சார்பில் கோஷம் எழுப்பப்பட்டது. உடுமலைப்பேட்டையிலுள்ள கல்லூரி ஒன்றிலும் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.�,