பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு. இந்த பாலியல் புகார் குறித்த வழக்கைத் தானாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டுமென்று பெண் வழக்கறிஞர்கள் அளித்த மேல் முறையீடு தொடர்பாகக் கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சபரிராஜன் என்ற ரிஸ்வந்த், மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த சதீஷ், பக்கோதிபாளையத்தைச் சேர்ந்த வசந்தகுமார் ஆகிய நான்கு பேர் சேர்ந்து இளம்பெண்கள், மாணவிகளை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து, அவர்களை மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக பொள்ளாச்சி கிழக்குக் காவல் நிலையத்தில் ஒரு மாணவியும் அவரது சகோதரரும் அவர்கள் மீது புகார் அளித்தனர். இந்த வழக்கில் நான்கு பேரையும் கைது செய்தனர் போலீசார். இவர்கள் நான்கு பேர் மீதும் குண்டர் சட்டம் ஏவப்பட்டு, தற்போது இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாலியல் புகார் குறித்த காவல் துறையின் விசாரணை குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது தமிழக டிஜிபி அலுவலகம். நேற்று (மார்ச் 13) இந்த வழக்கை எஸ்பி நிஷா பார்த்திபன், 5 ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை விசாரிக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டார் சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர். குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு குடும்பத்தினருக்குச் சொந்தமான சின்னப்பம்பாளையம் பண்ணை வீடு மற்றும் மாக்கினாம்பட்டி வீட்டில் நேற்று சிபிசிஐடி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இது பற்றிச் செய்தியாளரிடம் பேசிய ஐஜி ஸ்ரீதர், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டால், சிபிசிஐடி வசமுள்ள ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படும் என்று தகவல் வெளியாகியிருந்தது. இதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்தார்.
இந்த நிலையில், இன்று (மார்ச் 14) பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. இது குறித்து தமிழக உள் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் புகார் அளித்தவர்கள் பெயர்கள், தேதி, புகார் அளித்தவரைத் தாக்கியவர்களின் பெயர்கள், அவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்பட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
“இந்த வழக்கு விசாரணையில் ஃபேஸ்புக் தகவல்கள், ஐபி லாக், முகவரிகள், இணையப் பயன்பாடு உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக ஃபேஸ்புக் மற்றும் இதர இணையதளச் சேவைகளிடம் இருந்து தகவல்கள் பெற வேண்டியுள்ளது. மிகவும் சீரிய வழக்கு என்பதால், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. இதனால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது” என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 354 ஏ, பி, 392, தொழில்நுட்பத் தகவல் சட்டம் பிரிவு 66 இ, தமிழ்நாடு பெண்கள் பாலியல் கொடுமை தடுப்புச் சட்டம் 1998, குற்றப் பிரிவு 341, 323, 324, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக, இந்த அரசாணையில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
**உயர் நீதிமன்றம் மறுப்பு**
பிரசன்னா, பிரிசில்லா பாண்டியன் உள்ளிட்ட பெண் வழக்கறிஞர்கள் இணைந்து, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மேல்முறையீட்டை தாக்கல் செய்தனர். “இளம்பெண்கள், மாணவிகள் மீது நிகழ்த்தப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும். தமிழக அரசுக்கு தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து விசாரணை மேற்கொண்டது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமானி மற்றும் நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு. அப்போது, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிபதிகள், பெண் வழக்கறிஞர்களின் மேல்முறையீட்டை ஏற்க மறுத்தனர். இந்த வழக்கில் சிபிஐ செயல்பாடுகளைப் பார்க்கலாம் என்று தெரிவித்தனர்.
�,”