பொள்ளாச்சி ஆடியோ: யூடியூப்புக்கு சிபிசிஐடி கடிதம்!

Published On:

| By Balaji

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாகச் சமீபத்தில் ஒரு பெண் பேசுவது போல ஆடியோ வெளியானது. இது தொடர்பாக யூடியூப் நிறுவனத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளது சிபிசிஐடி.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மீது ஒரு கல்லூரி மாணவி புகார் தெரிவித்தார். பொள்ளாச்சி கிழக்கு போலீசார் இவர்களைக் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் வீடியோவொன்று வெளியானது. இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி தனிப்படை வசம் ஒப்படைக்கப்பட்டது. மார்ச் 13ஆம் தேதியன்று இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றி மாநில அரசு அரசாணை பிறப்பித்தபிறகும், சிபிசிபிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண்களின் வீடியோக்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து அகற்றப்பட வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் இந்நிறுவனங்களுக்குக் கடிதம் அனுப்பினர். இதற்குப் பதில் அனுப்பிய யூடியூப் நிர்வாகம், பொள்ளாச்சி சம்பந்தப்பட்ட 90 சதவிகித வீடியோக்கள் நீக்கப்பட்டுவிட்டதாகவும், மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் மட்டும் மீதமிருப்பதாகவும் தெரிவித்தது.

மூன்று நாட்களுக்கு முன்னர், பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக ஒரு பெண் பேசியது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பாக ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. பொள்ளாச்சி பாலியல் புகாரில் குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு கும்பல் ஒரு சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், இதில் பலியான அந்த சிறுமி அவரது பண்ணைவீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டதாகவும் அந்த ஆடியோவில் கூறப்பட்டிருந்தது. அந்த ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்துப் பரிசோதித்து வருவதாக சிபிசிஐடி தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் யூடியூப் நிறுவனத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். வழக்கில் சம்பந்தப்பட்ட ஆடியோவை பதிவேற்றம் செய்தவர் குறித்த தகவல்களைத் தருமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share