}பொள்ளாச்சி: அவமானமாக மடைமாற்றப்படும் வன்முறை!

public

பெருந்தேவி

பொள்ளாச்சியில் ஒரு ரவுடிக் கும்பலால் பல பெண்கள் அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்கும் ஆளாகியிருக்கும் நிலையில் இக்கட்டுரையை எழுதுகிறேன். பெண்களோடு நட்புக் கொண்டு, பழகி, நம்பிக்கை உருவாக்கி, அவர்களுடனான நெருக்கமான தருணங்களை வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டி, பணம் பறித்து என்று தொடர்ந்த குற்றச் செயல்கள் அம்பலமாகியிருக்கின்றன. இதுவரையில் நூற்றுக்கும் மேம்பட்டவர்கள் சிபிசிஐடியிடம் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு இந்தத் தொடர் பாலியல் கொடுமை குறித்துப் புகார் அளித்தார்கள் என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழ் (16, மார்ச் 2019).

பொள்ளாச்சி பயங்கரத்தைப் பொறுத்தவரை ஒரு வீடும் களமாக இருந்திருக்கிறது. ஒரு பத்திரிகைக் காணொலி இவ்வாறு விவரிக்கிறது: இந்த ரவுடிக் கும்பலில் ஓர் ஆண், தான் பழகிக்கொண்டிருக்கும் இளம்பெண்ணை அழைத்துவருகிறார், அங்கே அவரை ஒரு ‘செட் அப்’ அம்மாவிடம் அறிமுகப்படுத்துகிறார். உன் மருமகள் என அவரிடம் இந்தப் பெண்ணைக் குறித்துச் சொல்கிறார். உடனே அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை உறுதிப்படுகிறது. திருமணம் செய்துகொள்ளப் போகிறவன் என்றவுடன் தாராளமாகப் பழகத் தொடங்குகிறாள்… இப்படித்தான் இவர்கள் வசப்படுத்தப்பட்டார்கள் என்கிறது அந்தக் காணொலி.

**திருமணம் என்கிற தேங்காய் பத்தை**

இங்கே கவனிக்க வேண்டியது. பொறியில் வைக்கப்பட்டிருக்கிற திருமணம் என்கிற தேங்காய் பத்தை. திருமணத்தின் பெயரில்தான் பாலுறவு கொள்ள வேண்டும் அல்லது மணமாவதற்குமுன் ஒருவேளை பாலுறவு கொண்டால், உறவு கொண்டவருடனான திருமணம் அந்தப் ‘பிறழ்வைச்’ சரிசெய்துவிடும் என்ற கட்டுப்பெட்டித்தனம். அதுதான் எத்தகைய விபரீதங்களுக்கு இட்டுச்சென்றிருக்கிறது! திருமணத்தையும் பாலியல் விழைவையும் பிரித்துப் பார்க்கக்கூடிய, சிறிது பக்குவம் கூடிய சமூகம் நமக்கு வாய்த்திருந்தால் இந்தப் பெண்கள் இத்தகைய தொடர் வன்முறைக்கு ஆளாகியிருப்பார்களா என்ற கேள்வி எழுகிறது. மேலும், “மேற்கத்திய” சமூகங்களில் நிலவும் Dating பண்பாடு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், நம் சமூகத்தில் பலருக்கும் பாலியல் விழைவைக் காதல் என்று கருத வேண்டிய நிர்பந்தம் இருக்காது. திருமணத்தை இலக்காகவோ, அரணாகவோ வைத்துப் பாலுறவு கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்காது. சொல்லப்போனால், திருமணத்துக்குத் தனக்குப் பொருத்தமானவனை, பொருத்தமானவளை நன்கு சிந்தித்துத் தேர்ந்தெடுக்க வாய்ப்பும் அப்போது அதிகம்.

Dating இருக்கும் சமூகத்தில் எல்லாம் பாலியல் குற்றங்களே இல்லை என்பதல்ல நான் சொல்வது. Dating என்பது புழக்கத்தில் இருந்தால் ஒருவேளை இந்தப் பெண்கள் தங்கள் வீடுகளிலேயேகூட தங்களை ஈர்த்த அந்த ஆண்களோடு உறவுகொண்டிருக்க முடியும். அவர்களின் பெற்றோர் வீடு பாதுகாப்பாக இருந்திருக்கும். இத்தகைய பாதுகாப்பு அந்தப் பெண்களுக்குக் கிட்டாமல் போனதற்கு, அவர்களைக் குறை கூறுவதில் எந்த நியாயமும் இல்லை.

பொள்ளாச்சியில் பல வருடங்களாக இந்த வன்முறையும் குற்றச்செயலும் தொடர்ந்து நடைபெற்றிருந்தாலும், சென்ற மாதம் வரை இவை வெளிவரவே இல்லை. இப்போதும் பாதிக்கப்பட்ட பல பெண்களும் தங்களின் மோசமான அனுபவங்களை வெளிப்படுத்தத் தயாராக இல்லை. வெளிப்படுத்துவதால் பொதுவெளியில் சந்திக்கக்கூடிய ‘அவமானம்’ என்பது ஒரு முக்கியக் காரணம். இரு வருடங்கள் முன்பு சுசி லீக்ஸ் விவகாரம் நடந்தபோது, அதே காலகட்டத்தில் சேலத்தைச் சேர்ந்த இளம்பெண் தன்னுடைய புகைப்படத்தை ஓர் அயோக்கியன் ஆபாசமாக உருமாற்றம் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் தற்கொலை செய்துகொண்டார். இவ்விரண்டு நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு, தி இந்து நாளிதழில் வெளிவந்த என் [கட்டுரை ஒன்றில்](https://bit.ly/2TGnMWH) எவ்வாறு பெண் என்ற அடையாளத்தில் ஒருத்தி சந்திக்கும் வன்முறை, அவள் ஏற்க வேண்டிய அவமானமாக மடைமாற்றப்படுகிறது, இதில் சமூகக் கருத்தியலின் பங்கு என்ன என்பதைக் குறித்து எழுதியிருந்தேன்.

‘அவமானம்’ என்பதைக் கருதுகிறபோது ரூத் பெனிடிக்ட் போன்ற “மேற்கத்திய” மானுடவியலாளர்கள் முன்வைத்த மேற்கத்திய (ஐரோப்பிய), கிழக்கத்தியப் பண்பாடுகளை வகைப்படுத்தும் ‘அவமானம்’, ‘குற்றவுணர்வு’ போன்ற வார்ப்புரு வகைமைகள் நினைவுக்கு வருகின்றன. அகம் சார்ந்த குற்றவுணர்வை இயல்பானதாக ஐரோப்பியக் கலாச்சாரங்களுக்கும், புறச்சமூகம் தருகிற அழுத்தத்தால் அடைகிற அவமானம் என்பதைக் கீழைப் பண்பாடுகளுக்கும் வைத்து அத்தகைய வகைமைகள் பெனிடிக்ட் போன்றவர்களால் கொடுக்கப்பட்டன. அந்தக் காலாவதியான, பாரபட்சமான வகைமைகளை அடியொற்றி ‘அவமானம்’ என்பதை நான் குறிப்பிடவில்லை.

பொள்ளாச்சியில் நடந்திருப்பது போன்ற பெண்கள் எதிர்கொள்ளும் வகைமுறைகளைப் பேசும்போது, தமிழக, இந்தியச் சூழலில் அவமானமும் குற்றவுணர்வும் இரட்டைப் பிள்ளைகளாய்ச் சேர்ந்தே இயங்குகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருபுறம், சமூகக் கருத்தியலால் கட்டமைக்கப்பட்டிருக்கிற பெண்ணிடத்தில் சமூக நியதிகளுக்கு, ஆதரிசங்களுக்குத் ஏற்ப தான் நடந்துகொள்ளவில்லை என்பது அவமானத்தைத் தருகிறது. கூடவே குற்றவுணர்ச்சியையும் உருவாக்குகிறது.

ஆணுக்கும் இவை உண்டு என்றாலும், இவற்றை முன்னிட்டு கூடுதலான சுமை பெண்ணிடத்தில் வைக்கப்படுகிறது. திருமணத்துக்குப் பின்புதான், கணவனால்தான், ஒரு பெண் தொடப்பட வேண்டும், பாலியல் சுகத்தை அனுபவிக்க வேண்டும், அத்திருமணமும் அவள் பிறந்த சாதிக்குள் நடக்க வேண்டும் என்பன போல வடிவமைக்கப்பட்டிருக்கிற நியதிகளைக் குறிப்பிடுகிறேன். இத்தகைய நியதிகளை மறுத்து அல்லது பின்பற்றாமல் வாழும்போது சமூக வெளியில் ஏளனம், ஒதுக்கப்படுதல், சமயத்தில் வல்லுறவு, கொலை உள்ளிட்ட தண்டனைகள் கிடைக்கின்றன. இந்தத் தண்டனைகள் அவமானத்தையும் குற்றவுணர்வையும் தொடர்ந்து reinforce செய்கின்றன. சமூகச் செயற்பாடுகளாகவே இந்தத் தண்டனைகள் அமைகின்றன.

**சமூக அடையாளங்களின் பங்கு**

தமிழக அல்லது இந்தியச் சமூகத்தில் அவமானமும் குற்றவுணர்வும் தண்டனையும் தனிநபர் சார்ந்தவையாக இல்லை. ஏனெனில் நம் சமூகம் எதிர்ப் பாலியலை மையப்படுத்தும் சாதியச் சமூகமாகவும் உள்ளது. பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரு பெண் எதிர்கொள்வதாக மட்டுமில்லை இவை. பெற்றோர், பரந்த குடும்பம் ஆகியவையும் இவற்றை சுவீகரிக்க, ஏற்க வைக்கப்படுகின்றன. தொடர்புடைய சாதி, கிராமம், ஊர் எனப் பலவும் எதிர்மறையாக அடையாளப்படுத்தப்படுகின்றன. பாலியல்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் இத்தகைய அடையாளப்படுத்தல்களுக்கும் பங்கிருக்கிறது.

உதாரணமாக, பொள்ளாச்சியில் நிகழ்ந்த வன்முறைக் குற்றச் செயல்கள் வெளிவந்த பின், அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் மூன்று பெண்களின் திருமணங்கள் நிறுத்தப்பட்டன என்றொரு தகவல் எழுத்தாளர் தோழர் ஜீவலட்சுமியின் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது. இதுவும்தான் கள நிலவரம். சில ஆண்களின் குறுகிய மனப்பான்மை, வக்கிரப் பார்வை இது என்பதைத் தாண்டி இத்தகவலை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

ஒருபுறம் முகநூல், இன்ஸ்டகிராம், ட்விட்டர், வாட்ஸ் அப் என்று விரிந்துகொண்டே போகும் உலகளாவிய தகவல் நெடுஞ்சாலைகள். இவை பாலியல்களை வடிவமைப்பதில், பாலியல் விழைவுகளுக்கான வெளிப்பாட்டு வெளிகளாக இருப்பதில் விளைந்திருக்கிற புதிய சாத்தியங்கள். இன்னொரு புறம், இவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாத, செல்லரித்துப் போய்க்கொண்டிருக்கும் சாதி மைய, குடும்ப மைய எதிர்ப் பாலியல் ஒழுக்க நியதிகள்,

சாத்தியங்களுக்கும் நியதிகளுக்கும் இடையில், இத்தகைய நியதிகளை மீறும்போது என்று மட்டுமல்லாமல், இந்த நியதிகளை நினைவூட்டும் வகையில், அல்லது இந்த நியதிகளின் முக்கியத்துவத்தை நிறுவும் வகையில், தரப்படுகிற தண்டனைகள். திருமணங்கள் நிறுத்தப்பட்டிருக்கிற பெண்கள் இவ்விவகாரத்தில் சம்பந்தப்படவில்லை. என்றாலும் ஒருவகையில் தண்டனைக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் குடும்பங்களும் தண்டனைக்கு உள்ளாகின்றன. அதுதான் இங்கே விஷயம். ஒரே ஒரு திருமணம் இவ்வகையில் நிறுத்தப்பட்டாலும், அது தண்டனையாகவே ரூபம் கொள்கிறது. அச்சுறுத்தலாக மனதில் பதியவைக்கப்படுகிறது. இத்தகைய தண்டனைகளின் மூலமாகத்தான் நொய்மையான தன்னிலைகளாகப் பெண்பால் தன்னிலைகள் கட்டமைக்கப்படுவது நடக்கிறது.

பொருண்மையான தண்டனைகளைச் செயல்படுத்துவதற்கு இணையாக இணைய வெளி உள்ளிட்ட பொதுவெளிகளில், பெண்கள் புழங்குவதற்கான விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் மொழியப்படுகின்றன. பொள்ளாச்சி பயங்கரத்தைக் காரணமாகக் காட்டி, முகநூலைப் பூச்சாண்டியாகக் காட்டி, அச்சுறுத்தி பெண்களை சமூக வலைதளத்திலிருந்து அந்நியப்படுத்தப் பார்க்கும் போக்குகளும் இவற்றில் அடங்கும்.

பொள்ளாச்சி தொடர்பான விவாதங்களில் இத்தகைய கட்டுப்பாடுகள், தண்டனைகள் சிறிய அளவிலாவது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. பெண் கற்பு என்பது சமூக வலைதளத்தில் ஓரளவேனும் விவாதப் பொருளாகியிருக்கிறது. எதிர்ப்புச் சொல்லாடல்கள் ஊடகத்தில், சமூக வலைதளத்தில் சற்றேனும் வெளிவருகின்றன. என்றாலும் ஆண், பெண் பால் கட்டமைப்புகளின் அடிப்படைகள், இனப் பெருக்கத்துக்கு முக்கியத்துவம் தரும் எதிர்ப் பாலியல் நியதிகள் சவாலுக்கு உள்ளாவதில்லை என்பதைச் சுட்ட வேண்டியிருக்கிறது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *