நெட்டிசம் – சரா சுப்ரமணியம்
ஆர்க்குட் தளத்திலிருந்தும், ப்ளாக்ஸ்பாட் – வேர்ட்ப்ரஸ் வலைப்பதிவுகளிலிருந்தும் நம் நெட்டிசன்கள் ஃபேஸ்புக் நோக்கி இடம்பெயர்ந்த காலக்கட்டம் அது. ஆரம்ப ஆண்டுகளில் ஃபேஸ்புக்கில் பெண்கள் பெரும்பாலும் தங்கள் அடையாளங்களை மறைத்துதான் ஃபேக் ஐடி போல வலம் வந்தனர். பூக்கள், இயற்கைக் காட்சிகள், பெண் நடிகர்கள் போன்ற பொதுவானதும் இதமானதுமான ஃப்ரொபைல் பிக்சர்களைத் தாங்கிதான் அவர்களது ஃபேஸ்புக் பக்கங்கள் காணப்படும்.
பெண்களின் படங்களை ஃபேஸ்புக்கில் தவறாகப் பயன்படுத்துவது, சிலிர்ப்பின்பத் தளங்களில் ‘போட்டோஷாப்’பி ஆல்பம் உருவாக்குவது உள்ளிட்ட காரணிகள் மட்டுமின்றி, பெற்றோர் – உறவுகளின் அறிவுறுத்தல்களும் கட்டுப்பாடுகளுமே பெண்கள் தங்கள் படங்களை வெளிப்படையாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவந்தனர்.
‘ரிப்போர்ட்’ செய்தல் என்ற ஆப்ஷன்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படவே நீண்ட காலம் ஆனது. ஃபேஸ்புக்கில் தவறான பக்கங்களில் நம் படங்கள் பயன்படுத்தப்படுவது தெரியவந்தால், ‘ரிப்போர்ட்’ செய்து சம்பந்தப்பட்ட பக்கங்களையே நீக்க முடியும் என்பது பின்னர்தான் பிடிபட்டது.
இதனிடையே, ட்விட்டரின் வரவுக்குப் பிறகு, சமூகப் புரட்சிகளுக்கும் அரசியல் மாற்றங்களுக்கும் சமூக ஊடகங்கள் வெகுவாக வழிவகுப்பதை நம் சமூகம் உணரத் தொடங்கியபின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதை ஆரோக்கியமான போக்காக ஏற்க ஆரம்பித்தனர். பெண்கள் உள்பட அனைவருக்குமே சமூக வலைதளங்களின் நீக்குப்போக்குகள் குறித்த தெளிவு கிடைத்தது.
இத்தகைய பின்புலத்துடன்தான் ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய பெண்கள் ஃபேஸ்புக்கில் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்திக்கொண்டு கெத்தாக வலம்வரத் தொடங்கினர்.
**’உஷார்’ அட்வைஸ்**
கடந்த 10 ஆண்டுகளை எடுத்துக்கொள்வோம். சமகாலப் பெண் எழுத்தாளர்களைப் பட்டியலிடுவோம். இவர்கள் உருவாவதற்கும், எழுத்தாளர்களாகத் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் துணை புரிந்ததில் வெகுஜன ஊடகங்களுக்கு பெரிய பங்கு இருக்கிறதா அல்லது இணையத்துக்குப் பெரிய பங்கு இருக்கிறதா என மேலோட்டமாக ஆய்வு செய்தால்கூடக் கிடைக்கும் நிச்சய பதில்: இணையமும் சமூக ஊடகங்களும்தான்.
வெகுஜன ஊடகங்கள் பக்கபலமாக இருந்தால் மட்டுமே எழுத்துத் துறையில் கவனத்துக்குரிய இடத்தை அடைய முடியும் என்ற நிலையை இணையம் உடைத்தது. எவரையும் சார்ந்து இருக்காமல் இணையத்தைக் களமாகக் கொண்டு எழுதித் தீர்த்தவர்களுக்கு வெகுஜன ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து உரிய இடங்களைத் தந்து அழகு பார்க்கத் தொடங்கின. இதில், பெண்கள் குறிப்பிடத்தக்க அளவில் பயனடைந்தனர்.
எழுத்துத் துறை ஓர் உதாரணம் மட்டுமே. இதேபோல், பெண்கள் தாங்கள் பங்கு வகிக்கும் துறைகள் சார்ந்ததும், தங்களது பல்வேறு வித திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய தளமாகவும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்திக்கொண்டனர். மாணவர்களும் ஹோம் மேக்கர்களுக்கும் உலகை உள்வாங்கிக் கொண்டு பல்வேறு விஷயங்களில் தெளிவு பெறவும் உதவின.
மறுபக்கம் சமூக வலைதளத்தை மையமாகக் கொண்டு சைபர் குற்றங்களும், பாலியல் தொல்லைகளும் நடக்கவே செய்தன. இதையொட்டிய செய்திகள் வெகுஜன ஊடகங்களில் வெளிவரும்போதெல்லாம் செய்தி ஊடகங்கள் ‘உஷார்’ ரக எச்சரிக்கை – வழிகாட்டுதல் கட்டுரைகளை வெளியிட்டுவந்தன. இவற்றை மேற்கோள் காட்டி, சமூக வலைதளத்திலும் சக நெட்டிசன்களின் அக்கறைமிகு அட்வைஸ்கள் அவ்வப்போது வலம்வந்தன.
அந்தச் செய்திகளை உற்று நோக்கும்போது, சம்பந்தப்பட்ட இருவரோ அல்லது சிலரோ மட்டுமே காரணிகளாகவும் பாதிக்கப்பட்டோராகவும் இருப்பதால் சமூக வலைதளங்களின் பக்கவிளைவுகளாகவே கருதப்பட்டு, அவையெல்லாம் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாது என்பதே இயல்பாக இருந்துவந்தது.
**’பொள்ளாச்சி’ தாக்கம்**
‘பொள்ளாச்சி செக்ஸ் மாஃபியா’வின் கொடூரச் செயல்களை அறிந்தவுடன் ஆஃப்லைன் – ஆன்லைன் சமூகம் கடும் கோபமும் பதற்றமும் கொண்டது. இது மிகவும் இயல்புதான். ஆனால், இந்த மாஃபியாவை முன்வைத்து சமூக வலைதளங்களில் பெண்களுக்கு பீதி தருவதையும், அறிவுரைகளை வாரி வழங்குவதையும் தாண்டி, அவர்கள் தங்கள் உறவுகளாலேயே கட்டுப்படுத்தும் சூழல் அதிகரித்து இருப்பதைக் கவனிக்க முடிகிறது. பொள்ளாச்சி செக்ஸ் மாஃபியாவால் பாதிக்கப்பட்டதற்கு முழுமுதற் காரணமே ஃபேஸ்புக்தான் என்றால், இதுபோன்ற அறிவுறுத்தல்களில் அர்த்தம் உள்ளது. ஆனால், உண்மை அதுவல்ல என்பதே உண்மை. செய்தி ஊடகங்களின் அணுகுமுறையால்தான் இந்தத் தேவையற்ற அச்சுறுத்தல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியும்.
செய்திகளை வைரல் ஆக்குவதற்கான வசீகரத் தலைப்புகள் இடும் கலையில் செய்தி ஊடகங்கள் அதீத கவனம் செலுத்துவதுதான் இந்தத் தவறான புரிதலுக்கு முக்கியக் காரணம்.
பொள்ளாச்சி செய்திகளை செய்தி ஊடகங்கள் கையாளும் முறையை கவனிக்கும்போதும், பொள்ளாச்சியில் ‘நடந்தது என்ன?’ பின்னணியை நம்பத்தக்க சோர்ஸ் மூலம் அறிந்ததன் மூலமும் ஒரு முடிவுக்கு வர முடிகிறது.
உள்ளூர் செய்தியாளர்கள் தாங்கள் திரட்டிய செய்திகளைத் தங்களது எடிட்டோரியல் பிரிவுக்கு அனுப்புகின்றனர். அதை முழுமையாக வாசிக்கும் மூத்த செய்தியாளர்களும், எடிட்டர்களும்தான் தலைப்பைத் தீர்மானிக்கின்றனர். பொள்ளாச்சி செய்தியைப் பொறுத்தவரையில், பின்னணியில் குற்றம்சாட்டப்பட்டவர்களால் போலீஸுக்கு அளிக்கப்பட்ட முதற்கட்ட வாக்குமூலத்தில் ‘ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தியும் பெண்களை வளைத்தோம்’ என்கிற பகுதியை மட்டும் ‘ஹைலைட்’ செய்ய முடிவு செய்திருக்கின்றனர். ஏனெனில், ‘ஃபேஸ்புக் வலையில் சிக்கிய பெண்கள்’ என்கிற ரீதியிலான தலைப்புகளுக்கு வாசகர்களிடையே எப்போதும் மவுசு உண்டு என்பது அவர்களுக்குத் தெரியும்.
ஆனால், ஃபேஸ்புக்தான் இந்த மாஃபியாவின் மைய இடமா?
**யாரெல்லாம் இலக்கு?**
பொள்ளாச்சி செக்ஸ் மாஃபியாவின் இலக்கு என்பதே பொள்ளாச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பெண்கள்தான். தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மூலம் அறிமுகம் கிடைக்கப் பெற்று பள்ளி, கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்வோர், வீட்டைக் கவனிக்கும் பெண்கள் எனப் பல தரப்பினரையும் எளிதில் நேரடியாக அணுகக்கூடியவர்களை இலக்காக நிர்ணயித்துள்ளனர். பின்னர், சம்பந்தப்பட்ட பெண்களுடன் பழகியிருக்கின்றனர். அவர்களிடம் முழு நம்பிக்கை வரும் அளவுக்குத் தொடர்பை வலுப்படுத்தியிருக்கின்றனர். அந்தப் பெண்களின் தேவையை அறிந்து, உள்ள ரீதியிலும், உடல் ரீதியிலும் வேண்டியதைத் தரும் வகையில் செயல்பட்டு நம்பிக்கையைப் பெருக்கியுள்ளனர். இப்படித் தெரிவு செய்யப்படும் பெண்களிடம் பழகுவதற்கும், நெருக்கத்தைக் கூட்டுவதற்குமான கருவியாகவே செல்போன் பேச்சு, ஃபேஸ்புக் – வாட்ஸப் சாட்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இவ்வாறு முழு நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னர், குறிப்பிட்ட இடத்துக்கு அவர்களை வரவழைத்துதான் கொடூரங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். வீடியோ எடுத்து, மிரட்டிப் பணம் பறிப்பதுதான் இவர்களின் முக்கிய நோக்கம். வசதி படைத்த பெண்களிடம் ‘வீடியோவை வெளியிடுவோம்’ என மிரட்டிப் பணம் பறிப்பது ஒரு வகை. ‘ஏழைப் பெண்களிடம் வீடியோவை வெளியிடுவோம்’ என மிரட்டி, அவர்களைப் பணத்துக்காக வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பிட பணியவைப்பது இன்னொரு வகை. இதுதான் இந்த செக்ஸ் மாஃபியாவின் பாணி. இதில், பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களில் அந்தச் சுற்றுவட்டாரத்தைத் தாண்டிய பெண்களும், ஃபேஸ்புக் மூலம் மட்டுமே அறிமுகமாகி வலைக்குள் சிக்கிய பெண்களின் எண்ணிக்கையும் வெகு குறைவு.
ஆனால், பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், பரபரப்பைக் கூட்டுவதற்காகவும், சமூக வலைதளம்தான் இந்தக் கொடூரர்களின் களம் என்கிற ரீதியிலும், சமூக வலைதளங்கள்தான் இந்த அளவுக்கான பாதிப்புகளுக்குப் பெண்களை இட்டுச் சென்றது என்கிற ரீதியிலும் செய்திகளை ‘ஹைலைட்’ செய்ததுதான் சமூக வலைதளங்கள் மீதான தேவையற்ற அச்சத்தைக் கிளறியிருக்கிறது. இதுதான் சாக்கு என்று காத்திருந்த அடிப்படைவாதிகள் அட்வைஸ்களைத் தெளிக்க ஆரம்பித்துவிட்டனர். சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பெண்களுக்கு பெற்றோர்கள், உறவினர்கள் மத்தியிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.
‘சரி, பெண்களுக்கு அவ்வளவு பாதுகாப்பானதா ஃபேஸ்புக்?’
தற்போதைய சூழலில் இந்தக் கேள்வி எழுவது நியாயம்தான். தங்கள் பாலியல் தேவைகளுக்காக, சமூக வலைதளங்களில் இன்பாக்ஸ் மூலம் வலை விரிப்போரின் அணுகுமுறை குறித்து சமகால பெண்களுக்கு நல்ல புரிதலும் தெளிவும் இருக்கிறது என்பது உண்மை. அதேவேளையில், ஒவ்வொரு நாளும் புதிதாக சமூக வலைதளங்களில் அடியெடுத்து வைக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகுதியாக இருக்கிறது. அவர்களுக்கு அடிப்படையான விழிப்புணர்வுத் தகவல்களும், அறிவுறுத்தல்களும் அவசியம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால், பொள்ளாச்சி பயங்கரத்தை முன்வைத்து, அத்தகைய மாஃபியாவிடம் சிக்கிக்கொள்ள ஃபேஸ்புக்தான் காரணம் எனும் ரீதியில் கருத்துகளைப் பரப்பி மக்களை நம்பவைப்பதுதான் ஏற்க முடியாதது.
ஃபேஸ்புக்கில் இருந்தபடி செக்ஸ்டிங், வெர்ச்சுவல் செக்ஸ் முதலானவற்றுக்காக கருத்தொருமித்து தங்கள் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதும், அகம் – புறம் சார்ந்த போதாமையால் மாற்றுக் காதலை நாடுவதும் நடக்கவே செய்கிறது. இவை அனைத்துமே இருவர் சம்பந்தப்பட்டது. ஸ்மார்ட் போன் யுகத்தில் இவை பெரும்பாலும் ‘ஹார்ம்லெஸ்’ ஆகவே பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், பணத்துக்காகவும் செக்ஸுக்காகவும் திட்டமிட்டு ஒரு சிலர் இயங்குவது உண்டு. அவர்கள் பெரும்பாலும் தனித்தனியாகவே இயங்குவர். ஆனால், அவர்களின் போக்கை எளிதில் எதிர்ப் பாலினத்தவர் கண்டுபிடித்து, தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவிடுவர். இதுபோன்ற சமூக வலைதளங்களின் அடிப்படை பாதகச் சூழல்களுக்குத்தான் எப்போதும் விழிப்புணர்வு அவசியம். அந்த விழிப்புணர்வு எப்போதும் கிடைத்தவண்ணமே இருக்கிறது.
நம்மை மீறி, நம்மை எவராலும் சமூக வலைதளத்தில் எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்கிற நிலையை முழுமையாக அடைவது பற்றியே நாம் யோசிக்க வேண்டும்.
பொள்ளாச்சி வழக்குகளைப் பொறுத்தவரையில், ஆட்சி – அதிகார பலம் அண்டாத வகையில், நேர்மையான முறையில் விசாரணை நடைபெற்று, உரிய நீதி கிடைப்பதுடன், பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அரசியலை மக்கள் முன்னெடுக்க வேண்டியதே இப்போதைய தேவை. அதற்காக நெட்டிசன்களின் குரல் இன்னும் உரக்க ஒலிக்க வேண்டும்.
மாறாக, பொள்ளாச்சி செக்ஸ் மாஃபியாவை முன்வைத்து, ஃபேஸ்புக்கில் பெண்களுக்கு அதிகாரபூர்வமற்ற தடைகளை இந்தச் சமூகம் விதிப்பது எந்த அளவுக்கு சரி?
(கட்டுரையாளர் **சரா சுப்ரமணியம்** பத்திரிகையாளர், சினிமா ஆர்வலர். இவரைத் தொடர்புகொள்ள: fb.com/saraa.subramaniam)
[குழந்தைகளின் கண்ணியத்தைக் குலைக்கிறோமா?](https://minnambalam.com/k/2019/03/12/21)
�,”