தமிழகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் ஒரு வழக்கு பொள்ளாச்சி எனும் ஊர் குறித்த எண்ணத்தை மாற்றியமைத்தது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் இத்யாதி சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது குறித்த பயத்தை உருவாக்கியது. குறிப்பாக இளம்பெண்களின் சமூகப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியது. மாணவர் போராட்டங்களுக்கு வழி வகுத்தது. இது அத்தனைக்கும் காரணமானது, பொள்ளாச்சியில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு.
ஆம், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு, இன்று மாநிலத்தையே உலுக்கிக்கொண்டிருக்கிறது.
இதற்குக் காரணமான முதல் தகவல் அறிக்கைதான், இன்றுவரை பல செய்திகள் உருவாவதற்குக் காரணமாக இருந்துவருகிறது. அதில் இருப்பது என்ன என்பதை முதலில் பார்ப்போம். கீழே தரப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் மாணவியின் பெயர், ஊர் மற்றும் இதர விவரங்கள் தவிர்க்கப்படுகின்றன.
**முதல் தகவல் அறிக்கை**
“24.2.2019, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளர் ஆர்.ராஜேந்திர பிரசாத் பொறுப்பிலிருந்தபோது பொள்ளாச்சி –கிராமம் — நகரைச் சேர்ந்த -– என்பவரின் மகள் — ஆகியவர் கொடுத்த புகாரில், நான் திப்பம்படியிலுள்ள -– கல்லூரியில் B.Sc — இரண்டாமாண்டு படித்து வருகிறேன். என்னுடைய பள்ளித் தோழியான தேஜாஸ்ரீ மூலமாக மாகினாம்பட்டியைச் சேர்ந்த கனகராஜ் மகன் திருநாவுக்கரசு, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த நாகேஸ்வரன் மகன் சபரிராஜன் ஆகியோரை எனக்குத் தெரியும்.
இவர்கள் இருவரும் என்னிடம் அடிக்கடி செல்போனில் பேசுவார்கள். என் அண்ணன் வயதில் இருப்பதால் நானும் இவர்களிடம் நட்பு ரீதியில் பேசினேன். இந்நிலையில், கடந்த 12.2.2019 அன்று மதியம் 12.30 மணிக்கு நான் கல்லூரியில் இருந்தபோது, எனக்கு போன் செய்த சபரிராஜன், ‘உன்னிடம் தனியாகப் பேச வேண்டும், உடனே புறப்பட்டு ஊஞ்சவேலாம்பட்டி பஸ் ஸ்டாப்புக்கு வா’ என்று சொன்னான்.
நான் காலேஜில் இருந்து பஸ் ஏறி மதியம் ஒரு மணியளவில் ஊஞ்சவேலாம்பட்டி பஸ் ஸ்டாப்புக்கு வந்தேன். அங்கே ஒரு பேக்கரியின் முன்பாக TN 38 C-31 என்ற எண்ணுடைய சில்வர் கலர் ஃபோக்ஸ்வேகன் காரில் திருநாவுக்கரசுவும் சபரிராஜனும் இருந்தார்கள். நான் பக்கத்தில் போனதும், காரில் போய்கிட்டே பேசலாம் என்று சபரிராஜன் சொன்னான்.
நான் காரின் பின் சீட்டில் ஏறிக்கொண்டேன். சபரிராஜன் என் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டான். காரை திருநாவுக்கரசு ஸ்டார்ட் செய்தபோது இன்னும் இருவர் ஓடிவந்து ஏறினர். ஒருவன் திருநாவுக்கரசின் இடது பக்கத்திலும், இன்னொருவன் சபரிராஜன் பக்கத்திலும் உட்கார்ந்தனர்.
யார் இவர்கள் என்று கேட்டதற்கு, என்னுடைய நண்பர்கள் என்று அறிமுகம் செய்து, முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் பொள்ளாச்சி கடை வீதியில் ஜோக்கர் ரெடிமேட்ஸ் கடை வைத்திருக்கும் சதீஷ் எனவும், பின் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் பக்கோதிபாளையத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்றும் சொன்னான்.
தாராபுரம் ரோட்டில் சிறிது தூரம் சென்றதும், என்னிடம் என்னவோ பேச வேண்டும் என்று சொன்னாயே என்ன என்று கேட்டதும், அங்குள்ள ஒரு மில்லின் அருகில் மண் ரோட்டில் திருநாவுக்கரசு காரை நிறுத்தினான். அப்போது சபரிராஜன் என்னுடைய விருப்பமில்லாமல் என் மேலாடையைக் கழட்டினான். நான் சுதாகரித்துத் தடுப்பதற்குள், முன் சீட்டில் உட்கார்ந்திருந்த சதீஷ் என்னை மேலாடை கழண்டிருந்த கோலத்தில் வீடியோ எடுத்துவிட்டான்.
நான் பதறிப்போய், அவன் வைத்திருந்த செல்போனை தட்டிவிட்டு ‘என்னடா பண்ணறீங்க..?’ என்று சத்தம் போட்டேன். அப்போது, “நீ மேலாடை இல்லாமல் இருப்பதை நாங்கள் வீடியோ எடுத்துவிட்டோம். நாங்க எப்ப கூப்பிட்டாலும் வந்து, எங்ககூட சந்தோசமா இருக்கணும். நாங்க எப்ப பணம் கேட்டாலும் கொண்டாந்து குடுக்கணும். இதை வேற யார்கிட்டேயாவது சொன்னா, இப்போ எடுத்த வீடியோவை இன்டர்நெட்டில் அனுப்பி உன் குடும்பத்தையே சீரழித்துவிடுவோம்” என்று மிரட்டினார்கள்.
அப்போது, உன்கிட்டே இருக்கிற பணத்தை குடுன்னு மிரட்டினான் சதீஷ். எங்கிட்டே பணமில்லை என்று சொன்னேன். ‘அப்போ பணம் இல்லாட்டி என்ன, கழுத்திலிருக்கும் செயினை கழட்டிக் கொடுடி’ன்னு மிரட்டினான் சபரிராஜன்.
நான் குடுக்க முடியாதுன்னு சொன்னபோது சபரிராஜன், திருக்காவுக்கரசு, வசந்தகுமார் என் இரு கைகளையும் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள, சதீஷ் என் கழுத்திலிருந்த ஒரு பவுன் தங்க செயினைப் பறித்துக்கொண்டான். இதனால் மன வேதனையடைந்த நான் கதறியழுதேன். அப்போது என்னை அங்கேயே இறக்கிவிட்டு விட்டு நான்கு பேரும் கிழக்குப் பக்கம் காரில் சென்றுவிட்டனர்.
நான் அழுதுகொண்டு நிற்பதைப் பார்த்து, அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு பேர் பக்கத்தில் வந்து “ஏன் அழுகிறாய், உன்னை இங்கே இறக்கிவிட்டுப் போன காரை திருநாவுக்கரசு ஒட்டிக்கிட்டு போறான். பக்கத்துலே சதீஷ் உக்காந்திருக்கான். பின் சீட்டுலே வேற யாரோ ரெண்டு பேர் உக்காந்திருக்காங்க. அவங்களுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்?” என்று கேட்டார்கள்.
நான் நடந்த விஷயத்தை அவர்களிடம் சொல்லி, “இதை வெளியில் சொல்லாதீர்கள். என் வாழ்கையே பாழாகிவிடும்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “நீ கவலைப்படாமல் வீட்டுக்குப் போ, இதை வெளியில் யாரிடமும் சொல்ல மாட்டோம்” என்று கூறினர். ஏதாவது உதவி தேவைப்பட்டால் சொல்லும்மா என்று சொல்லிவிட்டு என்னை ஒரு போக்கு ஆட்டோவில் ஏற்றிவிட்டார்கள்.
அந்த ஆட்டோவில் ஏறி நான் காலேஜ் சென்றேன். பின்னர் காலேஜ் முடிந்ததும் வீட்டுக்குச் சென்றேன். எனக்கு நடந்த இந்த செயல் வீட்டுக்குத் தெரிந்தால் அவமானமாகிவிடும் என்று யாரிடமும் சொல்லாமல் இருந்தேன்.
ஆனால், சபரிராஜனும் சதீஷும் வசந்தகுமாரும் இரண்டு, மூன்று தடவை நேரில் பார்த்து, “செலவுக்குப் பணம் குடுக்கிறியா இல்லே உன்னுடைய ஆபாசப் படத்தை இண்டர்நெட்டில் போடவா” என்று மிரட்டினார்கள். இதனால், நடந்த உண்மைகளை என் பெற்றோர்களிடம் 24.02.2019 அன்று சொல்லிவிட்டேன். எனது அண்ணனும், அப்பாவும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்தனர். இதனால் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளோம்.
ஆசை வார்த்தை கூறி என்னை அழைத்துச் சென்று, எனது விருப்பமில்லாமல் ஆபாசமாக வீடியோ எடுத்து, என்னை மிரட்டி, நான் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் செயினை பறித்த மேற்படி நால்வர் மீதும் சட்டபடியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”
ஒரு கல்லூரி மாணவியால் கொடுக்கப்பட்ட இந்தப் புகார்தான், இன்று பொள்ளாச்சி பற்றி வெளியாகும் அத்தனை தகவல்களுக்கும் அடிப்படை.
பெண்களை ஆபாசமாக வீடியோ எடுப்பது, அதைக் காட்டி அவர்களை மிரட்டிப் பணம் பறிப்பது என்று ஊடகங்களில் தினமும் ஒரு புதுத்தகவல் வலுப்பெறுகிறது. இதற்குக் காரணமாக இருந்தது, அந்த மாணவி அளித்த ஒற்றைப் புகார்தான்.
போலீசார் திட்டமிட்டு இந்த வழக்கைப் போட்டுள்ளனர் என்பது திருநாவுக்கரசு குடும்பத்தினரின் வாதம். சமீபத்தில் அவர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட பேட்டிகளிலும் இது வெளிப்பட்டுள்ளது.
அப்படியானால், உண்மையில் என்னதான் நடந்தது?
(நாளை காலை ஏழு மணிப் பதிப்பில்…)
**மின்னம்பலம் டீம்**
�,”