பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் தவிர, வேறு எவருக்கும் திருநாவுக்கரசு கும்பல் எடுத்த வீடியோ அனுப்பப்படவில்லை என்பதைச் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரிடமும் போலீசார் உறுதி செய்து கொண்டனர். மீறி அதை அனுப்பியவர்களிடமும், யார் யாருக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டது. அவை அனைத்தும் அழிக்கப்பட்டன என்பதும் பின்னர் உறுதி செய்யப்பட்டது.
இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டாலும், பிரச்சினை அத்துடன் முடியவடையவில்லை. யாரோ ஒருவரிடம் அழிக்கப்படாமல் இருந்த வீடியோ ஒட்டுமொத்தச் சூழலையும் மாற்றியது. இதன் பின்னணியில் நடப்பு அரசியல் பலமாக வேலை செய்தது.
திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர் தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன். சமீபத்தில் அந்தப் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, அவருக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. உடுமலை ராதாகிருஷ்ணன் வகித்துவந்த மா.செ. பதவி தற்போதைய தமிழக சட்டமன்றத் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனிடம் தரப்பட்டது. இது கட்சிக்குள் பெரியளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தினர்.
கிட்டத்தட்ட அந்தப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ உடுமலை ராதாகிருஷ்ணன் தரப்பைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்தது. இந்த விவகாரத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் இரு தரப்புக்கும் இடையே சமரசம் பேசியதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வீடியோ அரசியல் பகடையாக மாறியது.
அதிமுக கட்சிக்குள் அது எந்தவித சலசலப்பையும் ஏற்படுத்தாது என்ற நிலையில், எதிர்முகாமில் இருந்த கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜுக்கு அனுப்பப்பட்டது. அவர் மூலமாக, அது திமுக மேலிடத்துக்குச் சென்று சேர்ந்தது. அதன்பிறகே, அங்கிருந்து அந்த வீடியோ ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட மாணவியின் வீடியோ வெளியானதற்குப் பதிலடி கொடுக்கும்விதமாக, அந்த மாணவியின் சகோதரரும் அவரது ஆட்களும் திருநாவுக்கரசு, சபரிராஜனை அடித்து உதைக்கும் காட்சி வெளியானது. ஒருவருக்கொருவர் பழி வாங்கும் விதமாகவே இவை வெளியிடப்பட்டன. யாரோ சிலரின் கைகளில் மீண்டும் இந்த வீடியோக்கள் பரவுவது தீராத பிரச்சினையாக மாறிப்போனது.
இதனால் மீண்டும் இந்தப் பிரச்சினை பொள்ளாச்சி ஜெயராமனிடம் செல்ல… மாணவியின் குடும்பத்தினர் பேச வார்த்தையில்லாமல் தவித்தனர். தாங்கள் ஏற்கனவே தாங்கள் சொன்னதுபோல இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிய வேண்டுமென்று வற்புறுத்தினார் பெண்ணின் சகோதரர். அதைச் செய்யுமாறு காவல் துறையினரிடம் பொள்ளாச்சி ஜெயராமனும் கூறியுள்ளார்.
இறுதியாக சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் நால்வர் மீதும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திருநாவுக்கரசு கைதாகவில்லை. சில நாட்கள் கழித்து அவர் ஜாமீன் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன்பிறகு, அவர் பொள்ளாச்சியிலிருந்து வெளியூர் கிளம்பிச் சென்றார். சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பெண்ணின் சகோதரர் மீது தாக்குதல் நடத்தியதாக செந்தில், பாபு, மணிகண்டன், வசந்தகுமார், பார் நாகராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் வழக்கு பதியப்பட்டது. இதில் மணிகண்டன் என்பவர் தலைமறைவாக, மற்றவர்கள் கைதாகினர். அதன்பின், ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். திருநாவுக்கரசு உள்ளிட்டோர் மீதான பாலியல் வழக்கில் பார் நாகராஜ் உட்பட சிலருக்கும் தொடர்பிருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இது பற்றிச் சில ஊடகங்களும் கேள்வி எழுப்பின.
இதன்பின் நடந்த சில நிகழ்ச்சிகளால் பொள்ளாச்சி ஜெயராமனிடம் பார் நாகராஜ் கேள்வி எழுப்பும் சூழல் உருவானது.
(நாளைக் காலை 7 மணிப் பதிப்பில் தொடரும்..)�,