பொருளாதார வளர்ச்சி சொர்க்கத்திலிருந்து வராது: பிரணாப்

Published On:

| By Balaji

5 லட்சம் கோடி டாலர் பொருளாதார வளர்ச்சி சொர்க்கத்திலிருந்து வரப்போவதில்லை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று (ஜூலை 18) நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “55 ஆண்டுகள் ஆட்சிக்காக காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பவர்கள் அனைவரும், நாம் விடுதலையடைந்தபோது எந்த நிலையில் இருந்தோம் என்பதையும் இப்போது எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதையும் நினைவுகூர மறுக்கின்றனர். மற்றவர்களும் பங்களித்துள்ளனர் என்பதை மறுக்க முடியாது. ஆனால் நவீன இந்தியாவிற்கான அடித்தளத்தை நமது நாட்டின் நிறுவனர்கள் திட்டமிட்டு அமைத்துள்ளனர். அவர்கள் திட்டமிட்ட பொருளாதாரத்தை உறுதியாக நம்பினர். ஆனால் இன்றோ திட்டக் குழு கூட கலைக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த வேண்டுமென்றால், சுழியத்திலிருந்து 1.8 லட்சம் கோடி டாலர் வரை நாங்கள் வலுவான தளத்தை கட்டமைத்துள்ளோம். 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்ட வேண்டுமென்றால் அதற்கான அடித்தளங்கள் அனைத்தும் முந்தைய ஆட்சியாளர்களான ஜவஹர்லால் நேரு, மன்மோகன் சிங், நரசிம்ம ராவ் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டன. 2019 பட்ஜெட் உரையின்போது, 2024ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலராக உயரும் என்று நிதியமைச்சர் கூறினார். அந்த வளர்ச்சி ஒன்றும் சொர்க்கத்திலிருந்து வரப்போவதில்லை.

பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளத்தை பிரிட்டிஷார்கள் அமைக்கவில்லை, விடுதலைக்கு பிறகு ஆட்சி செய்த இந்தியர்களே அமைத்தனர். ஜவஹர்லால் நேரு உள்ளிட்டோரால் அமைக்கப்பட்ட ஐஐடிகள், இஸ்ரோ, ஐஐஎம்கள், வங்கி அமைப்பு போன்றவற்றால் இந்தியா பன்மடங்கு வளர்ந்துள்ளது. நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோர் பொருளாதாரத்தை தாராளமயமாக்கினர். இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துதான் இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம் என நிதியமைச்சர் சொல்ல முடியும்.

மதம், ஜாதி, பாலினம், பிறப்பு ஆகியவற்றை கடந்து அனைவருக்கும் சமூகப் பொருளாதார சமத்துவத்திற்கு இந்திய அரசியலமைப்பு பாதுகாப்பளிக்கிறது. மதச்சார்பின்மையையும், நல்லிணக்கத்தையும் அரசியல் சாசனம் பாதுகாக்கிறது. சிறுபான்மையினரின் கல்வி மற்றும் கலாச்சார உரிமைகளை பாதுகாக்கவும் நமது நாட்டின் நிறுவனர்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். சங்கங்களை அமைப்பதற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும், தீண்டாமை ஒழிப்பிற்கும், தொழிற்துறை வளர்ச்சிக்கும், சோசலிசத்திற்கும் இந்தியா உறுதியளிக்கிறது. இந்த தொலைநோக்கு பார்வையால்தான் இந்தியா பிழைக்குமா என்ற சந்தேகங்கள் உடைந்துள்ளன” என்று பேசினார்.

**

மேலும் படிக்க

**

**[‘காம்ரேட்’டாக மாறிய விஜய் சேதுபதி](https://minnambalam.com/k/2019/07/19/26)**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share