பொன்.மாணிக்கவேலுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டன: எடப்பாடி

Published On:

| By Balaji

சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தந்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் இன்று (ஜூலை 19) காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெரியசாமி அதிமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேலுவுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை , பொள்ளாச்சி விவகாரம், கொடநாடு விவகாரம், செயின் பறிப்பு என அதிமுக அரசில் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பதாகக் குற்றம்சாட்டி பேசினார். இதற்கு அதிமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

பின்னர் திமுக சட்டமன்ற உறுப்பினரின் கேள்விகளுக்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ”சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாகப் பொறுப்பேற்றதிலிருந்து 31 சிலை கடத்தல் வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 13 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

7 வழக்குகளில் மட்டுமே நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.. 4வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை பெற்றுள்ளனர். 1983 முதல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் 259 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சராசரியாக, அந்த 28 வருட காலகட்டத்தில், 9 வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் பதியப்பட்டுள்ளன. ஆனால் பொன் மாணிக்கவேல் பதவிக் காலத்தில் ஆண்டுக்குச் சராசரியாக வெறும் 4 வழக்குகள் தான் பதியப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, 204 காவல் அதிகாரிகள் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அனுமதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக நியமிக்கப்பட்டனர். இதுதவிர சிலை திருட்டு தடுப்புப் பிரிவின் சிறப்பு குழுவிற்கு 31 நான்கு சக்கர வாகனங்களும், 29 இரு சக்கர வாகனங்களும், 15 வாக்கி டாக்கி கருவிகளும்15 கணினிகள், 12 யு.பி.எஸ்., 12 பிரிண்டர் என அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்பட்டுள்ளது என்றார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, பொன்.மாணிக்கவேல் பதவிக்காலத்தில் மட்டும் 22 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு அரசுத் தரப்பிலிருந்து அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்பட்டுள்ளது என்றார்.

செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரிப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று எம்.ஜி.ஆர் பாடலை சுட்டிக்காட்டினார். திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்க சென்னை முழுவதும் 2 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

**

மேலும் படிக்க

**

**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**

**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share