சிலைக் கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் பொய் வழக்குகளைப் போடுவதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.
தமிழத்தில் சிலைக் கடத்தல் விவகாரங்களை விசாரிக்கச் சிறப்பு விசாரணை அதிகாரியாக பொன்மாணிக்கவேலை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது. இவரது பணி நீட்டிப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. எனினும், பொன்மாணிக்கவேலின் பதவி நீட்டிப்பை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. சமீபத்தில் பொன்மாணிக்கவேல் மீது சிலைக் கடத்தல் சிறப்புப் பிரிவில் பணிபுரிந்துவரும் காவல் துறை அதிகாரிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 13 காவல் அதிகாரிகள் டிஜிபியிடம் புகார் அளித்தனர். பின்னர் பொன்மாணிக்கவேல் மீது நான்கு அதிகாரிகள் புகாரளித்தனர்.
இந்நிலையில் தற்போது அறநிலையத் துறை அதிகாரிகளும் பொன்மாணிக்கவேல் மீது புகார் அளித்துள்ளனர். அவர் பொய் வழக்குகளைப் போடுவதாகவும், அவரைக் கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், கூடுதல் டிஜிபி விஜயகுமார் ஆகியோரிடம் 10க்கும் மேற்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் புகார் மனு அளித்துள்ளனர்.
இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், “சிலைக் கடத்தல் எனக் கூறி இதுவரை 10 அறநிலையத் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொன்மாணிக்கவேலால் இந்து சமய அறநிலையத் துறையே முடங்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொன்மாணிக்கவேல் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட வேண்டும். சிலைக் கடத்தல் தொடர்பான எந்த வழக்கிலும் அவர் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. அவர் பதிவு செய்த வழக்குகளில் உண்மையும் இல்லை. கோயில்களில் உள்ள அறங்காவலர்களே சிலைகளுக்கு பொறுப்பு என்பதை அவர் உணர வேண்டும்” என்று கூறினார்.�,