17ஆவது மக்களவைக்கான 7ஆம் கட்டத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவிடம் மீண்டும் மனு கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்ற கடந்த 18ஆம் தேதி அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் விசிக மற்றும் பாமகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்குப் பட்டியலின மக்கள் வசித்து வந்த 20க்கும் மேற்பட்ட வீடுகளை பாமகவினர் அடித்து நொறுக்கினர். அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவை நேரில் சந்தித்த திருமாவளவன், பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு கோரி மனு கொடுத்திருந்தார். ஆனால் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடைபெறாது என்று சத்ய பிரதா சாஹூ தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் திருமாவளவன் சத்ய பிரதா சாஹுவை சந்தித்து பொன்பரப்பிக்கு மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி மனு கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், ”தலித் மக்களை வாக்களிக்கவிடாமல் பாமகவை சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர், பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான விஷ்ணுராஜூ வாக்களிக்கச் சென்ற போது தடுக்கப்பட்டிருக்கிறார். அவர் வாக்களிக்கச் சென்ற போது, வன்முறையில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் முன்னிலையிலேயே அவரை வாக்களிக்கக் கூடாது என்று மிரட்டியுள்ளனர், இந்நிலையில், தான் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அவர் முறையிட்டிருக்கிறார். பின்னர் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் மே 7ஆம் தேதி மனு கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. வாக்களிக்காமல் தடுக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டவர்களில், 95 பேர் தனிப்பட்ட முறையில் தாங்கள் மீண்டும் வாக்களிக்க வேண்டும் என்று எழுத்துப்பூர்வமாக விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் பதில் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் தான் விஷ்ணுராஜூ உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி, தலித் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர், சாதியின் பெயரால் வாக்களிக்க விடாமல் தடுக்கப்பட்டால் அது குற்றம். அந்த குற்றத்தைச் செய்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த ஆணையிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரித்த போது வன்முறையே நடக்கவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வன்முறை தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டதையும், ஊடகங்களில் வெளியான காட்சிகளையும் வைத்து தலைமைத் தேர்தல் அலுவலகத்தை அணுகும்படி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 21ஆம் தேதிக்குள் இவ்விவகாரம் தொடர்பாக உரிய ஆணை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவோடு, தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)
**
.
**
[ரித்தீஷ் மனைவி மீது புகார்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/51)
**
.
**
[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/70)
**
.
**
[ரவீந்திரநாத் எம்பி: கல்வெட்டில் பெயர் மறைப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/56)
**
.
.
�,”