பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளை மக்களிடம் கேட்பதற்குத் தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் கூட்டங்களை நடத்தத் தமிழக அரசு நேற்று (ஜூலை 12) ஆணைப் பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், “குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகள் குறித்துக் கேட்பதற்கு தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படும்.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, சென்னையில் உள்ள 17 மண்டலப் பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டுத் தீர்வு காணும் பொருட்டு வரும் ஜூலை 14ஆம் தேதி அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மக்கள் கலந்து கொள்ளலாம்.
குடும்ப அட்டைதாரர்கள் பெயர், முகவரி திருத்தம் மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், கடையில் பொருட்கள் கிடைப்பது பற்றியும், பொது விநியோகப் பொருட்கள் தனியார் சந்தைகளில் விற்கப்படுவது குறித்தும், நுகர்வோர் ஏமாற்றப்படுவது போன்ற பல்வேறு குறைபாடுகளையும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம். மக்கள் தெரிவிக்கும் குறைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,