அதிமுகவின் நிர்வாக முறைகள் பற்றி பொதுவெளியில் கருத்துக்கள் கூற வேண்டாம் என்று அதிமுகவினருக்கு பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் அறிவுறுத்தியுள்ளனர்.
அதிமுகவின் மதுரை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும், மதுரை வடக்கு எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா, இரட்டை தலைமையினால் அதிமுகவில் முடிவுகள் எடுப்பது தாமதமாகிறது. எனவே ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கருத்தினை நேற்று முன்வைத்திருந்தார். இது அதிமுகவுக்குள் சலசலப்பையும் விவாதத்தையும் உண்டாக்கிய நிலையில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என யாரும் இதற்கு கருத்துகூற மறுத்துவிட்டனர்.
ராஜன் செல்லப்பாவிற்கு ஆதரவளிப்பதாக பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் அதிரடியாக வீடியோ வெளியிட்டார். இதுதொடர்பாக பலரும் கருத்து தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், ஒற்றை தலைமை தொடர்பாக வரும் 12ஆம் தேதி அதிமுக தலைமைக் கழகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (ஜூன் 9) கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக கழக உடன்பிறப்புக்கள் சிலர் கழகத்தின் செயல்பாடுகளைப் பற்றியும், இனி என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டுவரும் கருத்துக்கள் அவ்வளவு வரவேற்கத் தக்கவையாக இல்லை. கழக உடன்பிறப்புக்கள் ஒவ்வொருவருக்கும் கழகத்தின் மீது அளப்பரிய அன்பும், பற்றும் இருக்கிறது என்பதையும், அந்த உணர்வுகளின் காரணமாகத்தான் இத்தகைய கருத்துக்களை கூறி வருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. இருந்தாலும் இடம், பொருள், ஏவல் அறிந்து நாம் செயல்படவேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர்.
“நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கும், ஒரு நாளேனும் முதலமைச்சர் பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்று பித்தம் தலைக்கேறியவர்களாய் பிதற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும் நம்முடைய சொல்லும், செயலும் உதவி செய்திடக்கூடாதல்லவா?” என்று குறிப்பிட்டுள்ளவர்கள், கட்டுப்பாடும், ஒழுங்கும் கட்டாயம் நமக்குத் தேவை. இவை சாதரணமானவைதான். ஆனால், இம்மாதிரி சாதாரண விஷயங்களைக் கொண்டுதான் ஓர் இயக்கத்தை உலகம் எடைபோடும். கழகத்தின் நலன் கருதி சில கருத்துக்களை யார் கூற விரும்பினாலும், அதற்கென ஒரு நேரமும், சந்தர்ப்பமும் செயற்குழு-பொதுக்குழு-ஆலோசனைக் கூட்டம் என்று பல்வேறு வாய்ப்புகளும் இருப்பதை அன்புகூர்ந்து நினைவில் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளனர்.
மேலும், “நம்முடைய பொதுவாழ்வு என்பது புனிதமானது. அரசியல் மூலம் நாம் வேண்டுவது சில்லரைப் பதவிகளையல்ல, சிங்கார வாழ்வையல்ல. நம் இனத்தின் விடுதலையை நாம் தேடுகிறோம். அந்தத் தேடலில் நமக்குத் துணை செய்யவே பதவியும், அரசும் என்பதை அறிந்திருக்கிறோம்” எனக் கூறியுள்ள இருவரும்,
கழக உடன்பிறப்புக்கள் இனி கழக நிர்வாக முறைகளைப் பற்றியோ, தேர்தல் முடிவுகளைப் பற்றிய தங்கள் பார்வைகளைப் பற்றியோ, கழகத்தின் முடிவுகளைப் பற்றியோ, பொது வெளியில் கருத்துக்களைக் கூறாமல் ஜெயலலிதா வழிகாட்டுதலில் செயல்பட்டதைப் போன்றே தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றும் அறிக்கையின் இறுதியில் தெரிவித்துள்ளனர்.
**
மேலும் படிக்க
**
**
[பன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்!](https://minnambalam.com/k/2019/06/09/40)
**
**
[ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!](https://minnambalam.com/k/2019/06/09/22)
**
**
[டிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!](https://minnambalam.com/k/2019/06/08/73)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
**
[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)
**
�,”