பொதுநல வழக்குகள்: பணம் சம்பாதிக்க பயன்படுத்தக் கூடாது!

Published On:

| By Balaji

பொதுநல வழக்குகளை பணம் சம்பாதிக்க பயன்படுத்தக் கூடாது என வக்கீல் குமாஸ்தாவுக்கு(தேவராஜன்) சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையை அடுத்த கத்திவாக்கத்தில் அடிப்படை வசதியில்லாமல் இயங்கி வரும் தனியார் நர்சரி பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பள்ளியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு, கடந்த விசாரணையின்போது உத்தரவிட்டிருந்தார்கள்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 13) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற நோட்டீஸை வாட்ஸ் ஆப் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்பி, மனுதாரர் தேவராஜன் மிரட்டியதாக கல்வித் துறை அதிகாரி புகார் தெரிவித்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்தின் உத்தரவு நகலை வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றனர்.

பள்ளி மீதான முன்விரோதம் காரணமாகவே இந்த வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும், இனி அவர் பொது நல வழக்கு தாக்கல் செய்யக் கூடாது என உத்தரவு பிறப்பிப்பதாகவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

பொது நல வழக்கின் மூலம் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டு வேறு நல்ல தொழிலை பார்க்குமாறு தேவராஜனிடம் நீதிபதிகள் தெரிவித்தனர். பெண் அதிகாரிக்கு வாட்ஸ் ஆப்பில் செய்தி அனுப்பியது குற்றச்செயல் என கண்டனம் தெரிவித்த நீதிபதி பவானி சுப்பராயன், இதற்காக 1 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, தேவராஜன் நீதிமன்றத்திலும், சம்பந்தப்பட்ட பெண் அதிகாரிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பள்ளி நிர்வாகத்துக்குச் சந்தர்ப்பம் வழங்கி விசாரித்த பின்னர், சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share