பொதுத் தேர்வு வேண்டாம்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Published On:

| By Balaji

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான பணிகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதுதொடர்பாக செப்டம்பர் 13ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அரசாணையும் வெளியிட்டார். ஆனால், மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் இந்தத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டுமென பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும், தேர்வு நடைபெறுவது உறுதி என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துவிட்டார்.

இந்த நிலையில் மதுரை நரசிங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லூயிஸ், நேற்று (ஜனவரி 30) உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், “தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தோல்வியடைந்த பாடங்களில் மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இவ்வளவு சிறு வயதிலேயே மறுதேர்வு எழுதச் சொல்வது மாணவர்களை மண உளைச்சலுக்கு உள்ளாக்கும். பள்ளிகளில் இடைநிற்றலும் அதிகரிக்கத் துவங்கும். ஆனால், பொதுத் தேர்வு அமல்படுத்துவதில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

தரமான கல்வி முறைகள் உள்ள நாடுகளில் கூட 5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அமலில் இல்லை என்றும், “ஆகவே, பொதுத் தேர்வு முறையை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக அரசிதழ் வெளியீடு மற்றும் அரசாணையை செயல்படுத்த தடை விதிப்பதோடு, அதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்றும் லூயிஸ் தாக்கல் செய்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share