உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ள நிலையில், உத்தரப்பிரதேசத்திலும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றிக்கையில், 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் அடுத்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும். தேர்வுக்குப் பதிவு செய்யும்போதும், தேர்வு எழுத வரும்போதும் ஆதார் கொண்டு வர வேண்டும்.
இதனால், பொதுத் தேர்வில் ஏற்படும் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க முடியும். ஏதேனும் ஒரு பள்ளி மாணவர் ஆதார் இல்லாமல் தேர்வு எழுத முடியாமல் போனால் அந்தப் பள்ளியின் முதல்வர்தான் அதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும். பொதுத் தேர்வு எழுத வரும் மாணவர்கள் ஹால் டிக்கெட், ஆதார் கார்டையும் தேர்வு எழுதும் அறைக்குக் கொண்டுவர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை ஆதார் எண் கட்டாயம் என்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
�,