17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் தேதியைத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று (மார்ச் 10) மாலை அறிவித்தார். மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 11 முதல் மே 19 தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.
இதுபற்றி நேற்று மாலை மின்னம்பலம் செய்தியில் [ஏப்ரல் 11 தேர்தல்: மே 23 முடிவுகள் அறிவிப்பு!]( https://minnambalam.com/k/2019/03/10/60) விரிவாக வெளியிட்டுள்ளோம். இந்த மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கும் வாக்குப் பதிவுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவும் நடக்கிறது.
21 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளுக்கு நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்த மூன்று தொகுதிகளைத் தவிர்த்து எஞ்சிய 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
ஒட்டப்பிடாரத்தில் அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் வெற்றியை எதிர்த்து புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி தொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. திருப்பரங்குன்றத்தில் அதிமுக ஏ.கே.போஸ் வெற்றியை எதிர்த்து திமுக டாக்டர் சரவணன் தொடுத்த வழக்கும், அரவக்குறிச்சி அதிமுக செந்தில்பாலாஜி வெற்றியை எதிர்த்து திமுக கே.சி.பழனிச்சாமி தொடுத்த வழக்கும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. செந்தில்பாலாஜி இப்போது திமுகவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.
இதுகுறித்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து 12 மாநிலங்களில் காலியாக உள்ள 34 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடைபெறுகிறது. அந்தந்த மாநிலங்களுக்கு மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்போது இடைத் தேர்தல் வாக்குப்பதிவும் இணைந்து நடக்கும்” என்று கூறியுள்ளார்.
இதன்படி தமிழகத்தில், பூந்தமல்லி (தனித் தொகுதி), பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம் (தனித் தொகுதி), ஆம்பூர், ஒசூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனித் தொகுதி), நிலக்கோட்டை (தனித் தொகுதி), திருவாரூர், தஞ்சாவூர், மானாமதுரை (தனித் தொகுதி), ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனித் தொகுதி), சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம் ஆகிய 18 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் தத்தன்சாவடி தொகுதிக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தொகுதியுடன் சேர்த்து சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்குப்பதிவும் நடக்கவுள்ளதாக சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
அதேபோல பிகாரில் இரண்டு தொகுதிகளுக்கும், கோவாவில் மூன்று தொகுதிகளுக்கும், குஜராத்தில் இரண்டு தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் இரண்டு தொகுதிகளுக்கும் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிக்கும் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.�,