வாகனப் போக்குவரத்துக்கேற்ற சுலபமான வழிகளைத் தேர்தெடுக்க உதவும் கூகுள் மேப்ஸில் பைக் ஓட்டுபவர்களுக்கு எனத் தற்போது புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் புதிதாக ஒருவர் செல்ல விரும்பும்போது அவருக்குக் கை கொடுக்கும் சாதனமாக விளங்குவது கூகுள் மேப். குறிப்பாக வாடகை கார் இயக்கும் நிறுவனங்களுக்கு இந்தச் சேவை வரப்பிரசாதமாக விளங்குகிறது. ஆனால், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு என இந்தச் சேவையில் தனிப்பிரிவு இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் கூகுள் மேப்ஸில் பைக் ஓட்டுபவர்களுக்கு என பிரத்யேகமான புதிய வசதி நேற்று (டிசம்பர் 5) முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் இந்தச் சேவை அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கமான சேவை போன்று இதிலும் குரல் வழி வழிகாட்டும் சேவையும் உள்ளது.
கூகுள் மேப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கெனவே இருக்கக் கூடிய டிரைவ், டிரெயின் அல்லது பஸ் மற்றும் வாக் ஆகிய வசதிகளோடு தற்போது பைக் வசதியும் புதிதாக சேர்ந்துள்ளது.
இதுகுறித்து கூகுள் துணைத் தலைவர் சீசர் சென்குப்தா கூறுகையில், உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகனச் சந்தையாக இந்தியா உள்ளது. எனவே, இதைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான பயனாளர்களுக்கு என இதர வாகனங்களைப் போல அல்லாமல் பிரத்யேக வசதிகளை அளிக்க வேண்டிய தேவையுள்ளது.
இந்தியர்கள் பெரும்பாலும் பைக் பயணத்தின்போது உள்ளூர் அடையாளத் தலங்களையே நினைவில் வைத்துக்கொள்ள விரும்புவார்கள். அதன்படி பயனாளர்கள் செல்லும் வழியில் உள்ள உள்ளூர் அடையாளத் தலங்கள் அனைத்தும் தெளிவாக இதில் குறிப்பிடப்பட்டிருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில்தான் இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மற்ற நாடுகளுக்கும் இந்த வசதி விரைவில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.�,