சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் செயலிகளின் தலைமை நிர்வாகிகளுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு விரைவில் சம்மன் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் குடிமக்கள் பாதுகாப்பு உரிமைகள் குறித்து விவாதிக்க சமூக ஊடகங்களின் நிறுவனர்களுடன் ஆலோசனை நடத்த தகவல் தொழில்நுட்பங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு திட்டமிட்டுள்ளது. இதன்படி ட்விட்டர் சமூக வலைதளத்தின் சர்வதேச நிர்வாகத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதிக்குள் வருமாறும் அறிவுறுத்தியுள்ளது. முதல் ஆலோசனைக் கூட்டத்தை ட்விட்டர் நிர்வாகம் தவிர்த்துவிட்ட நிலையில் இந்த 2ஆம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இரண்டாம் கட்டமாக பேஸ்புக், வாட்ஸ் அப் நிர்வாகத்திற்கு சம்மன் அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேஸ்புக், வாட்ஸ் அப் நிர்வாகத்துடனான ஆலோசனைக் கூட்டம் மார்ச் மாதத்தில் நடக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் செயலிகளுக்கு இன்னமும் சம்மன் அனுப்பப்படவில்லை. ட்விட்டர் நிர்வாகத்துடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு அதிக கவனம் செலுத்தவே தற்போது நாடாளுமன்ற நிலைக்குழு ஈடுபாடு காட்டி வருவதாகவும், இந்தக் கூட்டத்துக்கு பிறகு பேஸ்புக், வாட்ஸ் அப்புக்கு சம்மன் அனுப்பப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ட்விட்டர் நிறுவனத்திடம் கேட்கும் கேள்விகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கேள்விகளை பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனத்திடம் கேட்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் *தி எகனாமிக் டைம்ஸ்* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிர்வாகத்திடம் கேட்கப்படும் கேள்விகள் முழுமையாகத் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, பிப்ரவரி 11ஆம் தேதி வருமாறு ட்விட்டர் நிர்வாகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ட்விட்டர் இந்தியாவின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.�,