சட்டவிரோத பேனரால் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த நிலையில், ’பேனர தள்ளிவிட்ட காத்து மேலதான் கேசு போடணும்’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
கனடா செல்லும் கனவோடு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஐடி பெண் ஊழியர், குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ, சட்டவிரோத பேனரால் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சட்டவிரோதமாக, அனுமதியின்றி பேனர் வைத்த பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மட்டும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தனர். ஆளும்கட்சியை சேர்ந்தவர் என்பதால் ஜெயகோபால் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக குற்றம்சாட்டியது. பின்னர் நீதிமன்றம் கொடுத்த அழுத்தத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சுபஸ்ரீ உயிரிழந்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்தில் உள்ள நிலையில், ஆளும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். ” சுபஸ்ரீ குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை, வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம்” என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் உட்பட பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக பொருளாளர், பிரேமலதா, சம்பவத்தன்று ”அந்த பெண் அவ்வழியே கடக்க வேண்டும், அவர் மீது பேனர் விழுந்து உயிரிழக்க வேண்டும் என்பது விதி” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். பிரேமலதாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நியூஸ் 7 நிகழ்ச்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், ”காத்தடிச்சுதான் பேனர் விழுகிறது. பேனர் வைத்தவரா சுபஸ்ரீயை கொன்னாரு. கேசு போடுறதுனா, காத்து மேலதான் கேசு போடனும்” என்று பேசியிருக்கிறார். இது குறித்து வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதை கண்ட பலர் அவரை திட்டியும் வருகின்றனர்.
தமிழ்நாடு பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் சேலம் மாவட்ட பொறுப்பாளர் வளர்மதி மின்னம்பலத்திடம் கூறுகையில், “பிரேமலதா , பொன்னையன் இருவரின் வீட்டில் ஒருவருக்கோ அல்லது உறவினர்களுக்கோ இதுபோன்று நடந்திருந்தால் காத்து மேல கேசு போடணும், இல்லையென்றால் அது அவர்களது விதி என்று கூறியிருப்பார்களா? அல்லது இந்த அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பியிருப்பார்களா?” என கேள்வி எழுப்பினார். ”ஒரு உயிரை, உயிராக மதிக்காமல் தூக்கி எரிகின்ற அளவுக்கு இவர்கள் பேசுவதன் மூலம் மக்களுக்காக நாங்கள் பேசுகிறோம் என எந்த அளவுக்கு வேசம் போடுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. டிராபிக் ராமசாமி மட்டும் பேனருக்கு எதிராக போராடும் நிலையில் அதனை யாரும் பெரிதாக பொருட்படுத்துவது இல்லை. ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதற்காக பிரேமலதா இவ்வாறு பேசுகிறார். ஆட்சிக்காக, பொறுப்புக்காக இவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். இவர்களைப் போன்ற அரசியல் வாதிகளிடம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். இதுதான் இவர்களின் உண்மையான சுயரூபம்” என்று குறிப்பிட்டார்.
சுபஸ்ரீ வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. அரசியல் கட்சி தலைவர்கள் சட்ட விரோதமாகப் பேனர் வைக்கக் கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்த நீதிமன்றம், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி வழங்கியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சுபஸ்ரீயின் தாய், “பேனர் கலாச்சாரம் வேண்டாம் என்று பிரதமர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்களை வரவேற்கப் பல வழிகள் உள்ளன. ஃப்ளெக்ஸ் போர்டுகள் மற்றும் பதாகைகள் வைப்பது ஒரே வழியல்ல. பேனர்களைப் பார்த்தால் பிரதமர் மகிழ்வார் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
�,”