<பேனர்களை அகற்றுங்கள்!

public

திருச்சி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை நாளைக்குள் (அக்டோபர் 26) அகற்றிவிட்டு வரும் 30ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொது இடங்களில் பேனர்கள் வைப்பது தொடர்பாக சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திரிலோக்‌ஷன குமாரி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், உயிரோடு இருப்பவர்களுக்கு பேனர், கட்-அவுட்களை வைக்கத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 24 ஆம் தேதி உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து மூன்று நாட்கள் கூட முழுவதும் முடியாத நிலையில், திருச்சியில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள வரும் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு வரிசையாக பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் இதுகுறித்து ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில்,”திருச்சியில் முதல்வர் தலைமையில் நூற்றாண்டு விழா நடத்துவதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளக்ஸ்களையும், பேனர்களை வைத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும், காவல் துறை அதிகாரிகளிடமும் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை” என்று கூறியுள்ளார். வழக்கின் விசாரணையில்,பேனர் விவகாரம் குறித்து இன்று மாலை 4மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழக அரசின் சார்பில்,”எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அரசு மற்றும் தனியார் என 220 பேனர்கள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விதிமுறை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்”விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்அவுட் தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தால் நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையிலான குழுவிடம் முறையிடலாம், பேனர்கள் தற்காலிகமாகவே வைக்கப்பட்டுள்ளன இன்றிரவே பேனர்கள் அகற்றப்படும் என்று அரசு தரப்பிலிருந்து வாதமும் எடுத்து வைக்கப்பட்டது.

இதையடுத்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில்,” அதிகளவில் பேனர் வைக்கப்பட்டதால், அதற்கு சட்டத்துக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் பேனர் விவகாரத்தில் வழக்குக்கு மேல் வழக்கு போடுவதாலும், உத்தரவுக்கு மேல் உத்தரவு போடுவதாலும் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. விதிகளை மீறி வைக்கப்படும் பேனர் விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டியுள்ளது.

எனவே திருச்சி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை நாளைக்குள் அகற்ற வேண்டும். இதுகுறித்து வரும் 31ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0