சங்கத்தமிழன் திரைப்படத்தின் பேனருக்காக வைத்திருந்த பணத்தை விஜய் சேதுபதி ரசிகர்கள் பயன்படுத்திய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
விஜய்சந்தர் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் சங்கத்தமிழன். வரும் தீபாவளியன்று இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. இதில் விஜய் சேதுபதி, இரட்டை வேடங்களில் நடித்துள்ளதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த நிலையில் சங்கத்தமிழன் விளம்பரத்துக்காக வைத்திருந்த பணத்தை விஜய் சேதுபதி ரசிகர்கள் வேறு விதமாக பயன்படுத்தியுள்ளனர்.
அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்கு வைக்கப்பட்ட பேனர் விழுந்து, இளம்பெண் சுபஸ்ரீ பலியான சம்பவம் அனைத்துத் தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்த நடிகர்களும் தங்களது திரைப்பட வெளியீட்டின்போது பேனர்கள் வைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விஜய் சேதுபதி நற்பணி மன்றத்தினர், சங்கத்தமிழன் திரைப்படத்துக்கு பேனர் வைப்பதற்குப் பதிலாக மரக்கன்றுகள் வழங்க திட்டமிட்டிருந்தனர்.
இதற்கிடையே சங்கராபுரம் அருகே கடுகனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனது ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளனர். அந்தப் பகுதியை சேர்ந்த பலரிடமும் வட்டிக்குப் பணம் கேட்டு வந்துள்ளார். இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட விஜய் சேதுபதி நற்பணி மன்றத்தினர், தாங்களே ஒரு ஏக்கர் நிலத்தை பயிர் செய்வதற்கான அனைத்து செலவையும் ஏற்றுக்கொள்கிறோம் என்று முன்வந்தனர்.
அதைத் தொடர்ந்து, நேற்று (அக்டோபர் 5) பிரகாஷின் சொந்த ஊரான கடுகனூருக்கு நேரில் சென்று டிராக்டரைப் பயன்படுத்தி உழவுப் பணிகளில் ஈடுபட்டனர். வயலில் நாற்று நட்டு விவசாயப் பணிகளையும் தொடங்கினர். மேலும், நெல் பயிரிடத் தேவையான உரம் உள்ளிட்டவற்றையும் விஜய் சேதுபதி ரசிகர்களே வாங்கிக் கொடுத்துள்ளனர். இதற்காக விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு பிரகாஷ் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
திரைப்படங்களுக்குப் பேனர், கட்-அவுட், பாலாபிஷேகம் செய்வதற்குப் பதிலாக விஜய் சேதுபதி ரசிகர்கள், இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டிருப்பது அனைத்துத் தரப்பிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.�,”