கோவா சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் வெற்றிபெற்றுள்ளார்.
கோவா மாநில முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் நீண்ட நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தநிலையில் கடந்த 17ஆம் தேதியன்று காலமானார். அதன் பின் கோவா சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகரான பிரமோத் சாவந்த் நேற்று (மார்ச் 19) முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதையடுத்து இன்று (மார்ச் 20) கோவா சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 20 வாக்குகள் வித்தியாசத்தில் பிரமோத் சாவந்த் வெற்றி பெற்றார். பாஜகவின் 11 எம்.எல்.ஏக்கள், கோவா ஃபார்வர்ட் கட்சியை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள், மகாராஷ்டிர கோமந்தக் கட்சியை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள் மற்றும் மூன்று சுயேச்சை எம்.எல்.ஏக்கள் ஆகியோர் பிரமோத் சாவந்துக்கு ஆதரவளித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் 14 எம்.எல்.ஏக்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு எம்.எல்.ஏவும் பிரமோத் சாவந்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு கூட்டத்திற்கு துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தலைமை தாங்கினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற பிறகு பிரமோத் சாவந்த் *இந்தியன் எக்ஸ்பிரஸ்* ஊடகத்திடம் பேசுகையில், “மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு பின் முதலமைச்சர் இருக்கையில் அமரும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நான் பாஜகவில் ஒரு சாதாரண கட்சி பணியாளராக இருந்தேன். பின்னர் சபாநாயகராகி, தற்போது முதலமைச்சராகி இருக்கிறேன். முதலில் நான் ஒரு கட்சி பணியாளர்தான். கோவா மக்களின் ஒவ்வொருவரின் உதவியும் எனக்கு வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.�,