பெரியாரின் பெருந்தொண்டர் காந்தியம்மாள் மறைந்தார்!

Published On:

| By Balaji

1946 ஆம் ஆண்டு மதுரையில் திராவிடர் கழகம் கருஞ்சட்டை மாநாட்டை அறிவித்து நடத்தியது. அன்றைய காங்கிரஸ் கட்சி இதற்கு எதிர்ப்பாக இருந்தது. இதற்கிடையில் சிலரின் தூண்டுதலால் மதுரை மாநாட்டு பந்தலுக்கு தீ வைக்கப்பட்டது. மேடையிலிருந்த பெரியார் தோழர்களால் காப்பாற்றப் படுகிறார். தீயிலிருந்து தப்பிக்க மாநாட்டில் திரண்டிருந்த கருஞ்சட்டைத் தொண்டர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அவ்வாறு ஓடியவர்கள் கிடைக்கும் பேருந்தில் ஏறி தப்ப முயற்சித்தனர்.

அவ்வாறு ஒரு பேருந்தில் அருப்புக்கோட்டை ச.வீ.க முத்துச்சாமி, அவர் துணைவியார் காந்தியம்மாள், இவர்களுடைய மகன் தமிழரசன் மூவரும் ஏறினர். அந்தப் பேருந்து வன்முறையாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.

ஆயுதங்களுடன் திரண்ட அந்த வன்முறைக் கூட்டத்தைப் பார்த்த ஓட்டுனர் வண்டியை விட்டு விட்டு ஓடி விட்டார். பேருந்தில் இருந்த கருஞ்சட்டை அணிந்தவர்கள் வன்முறையாளர்களால் கீழிறக்கி விடப்பட்டார்கள். கையில் குழந்தையுடன் கணவரையும் கையில் பற்றிக் கொண்டு காந்தியம்மாள் இறங்கினார். முத்துச்சாமியை வன்முறையாளர்கள் அடிப்பதற்காக இழுத்துச் செல்ல முயன்றனர். தனிப் பெண்ணாக அவர்களுடன் பிடிவாதமாக வாதாடி கணவனை மீட்கப் போராடுகிறார் காந்திமதியம்மாள்.

இதனைக் கண்ட பொதுமக்களில் ஒருவர், காந்தியம்மாளின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டு அங்கிருந்து போய்விடுகிறார். கணவரை வன்முறையாளர்களிடமிருந்து மீட்ட காந்திமதியம்மாள் குழந்தையைக் காணாமல் அங்கும் இங்கும் தேடி அலைகிறார்.

காவல் துறையினரோ லத்தியை ஆட்டியபடி அந்த இடத்திலிருந்து உடனடியாக கிளம்பச் சொல்லி மிரட்டுகின்றனர். ஆனால், என் குழந்தை என்னுடைய கைக்கு வராமல் இந்த இடத்தை விட்டு உயிரே போனாலும் நான் போகமாட்டேன் என எதிர்த்து காவல் துறையினரிடம் போராடுகிறார்.

அதற்குள், அங்கு ஓரமாக இருந்த டீக்டையிலிருந்து வந்த ஒருவர், “அம்மா உங்கள் குழந்தையின் கருப்புச் சட்டையைக் கழற்றி விட்டு பத்திரமாக கடையின் உள்ளே உட்கார வைத்திருக்கிறோம். கருப்புச் சட்டை போட்டிருந்ததால் பிள்ளையை அடித்து விடுவார்களோ என்கிற பயத்தில் சட்டையைக் கழற்றி விட்டோம். உங்கள் குழந்தை பத்திரமாக இருக்கிறது” என்று சொல்ல அமைதிக்கு திரும்புகிறார்கள் முத்துச்சாமி, காந்தியம்மாள் மற்றும் கருஞ்சட்டைத் தொண்டர்கள்.

அந்த தீரமிக்க கருஞ்சட்டைப் போராளி பெரியார் பெருந்தொண்டர் 100 வயதை நெருங்கிக் கொண்டிருந்த காந்தியம்மாள் (திமுக அதன்பின் திராவிடர் கழகம் ஆகியவற்றில் பேச்சாளராகவும் மாவட்டத் தலைவராகவும் இருந்த தமிழரசன் தாயார், பெரியாரிய செயற்பாட்டாளரும் புதிய குரல் அமைப்பின் நிறுவனருமான ஓவியா அவர்களின் பாட்டி, ஊடகவியலாளர் ஜீவசகாப்தனின் பூட்டி) நேற்று (ஜூலை 12) இரவு இயற்கை எய்தினார்.

**

மேலும் படிக்க

**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share